வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/09/2018)

கடைசி தொடர்பு:08:42 (03/09/2018)

`அமைதியை வளர்த்தெடுத்திட வேண்டும்' - ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின்
 

கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான கெளரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவரான அமோல் காலேயிடம் கர்நாடக காவல்துறை விசாரணை நடத்தியது. அவரின் நாட்குறிப்பு ஒன்றையும் கைப்பற்றியது. அதில் 34 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. கெளரி லங்கேஷைத் தொடர்ந்து இந்த 34 பேரையும் அவர்கள் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

இதையடுத்து அவருக்குப் பாதுகாப்பு வழங்கத் தமிழக அரசுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தவகையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``மாற்றுச் சித்தாந்தம் கொண்டோரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஜனநாயக ரீதியாகக் கருத்துக்கு கருத்து என்ற பண்பட்ட முறையில் பதில் சொல்ல முடியாத தேச விரோதிகள், அங்கொருவர் இங்கொருவர் எனத் தலை தூக்கி, அவர்கள் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் - எழுத்தாளருமான ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது.

ரவிக்குமார்

ஆக்கபூர்வமாக கருத்துகளைத் தெரிவிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் அபாயகரமான போக்கு தமிழகத்தில் குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியில் அதிகரித்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்து, ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்புகளை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும், இதுபோன்ற தீவிரவாத வன்முறையில் ஈடுபட நினைக்கும் வெறியர்களைச் சட்டத்தின் துணை கொண்டு முளையிலேயே கிள்ளியெறிந்து, சமூகத்தில் நல்இணக்கத்தையும், அமைதியையும் வளர்த்தெடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க