வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (03/09/2018)

கடைசி தொடர்பு:08:46 (03/09/2018)

`கோவையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர்' - இந்து அமைப்பினருக்கு குறி?

அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சித் தலைவரான அர்ஜுன் சம்பத்தையும் அவரது கட்சி  நிர்வாகிகள் சிலரையும் கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து நபர்களை கோவை நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள முக்கியமான இந்து அமைப்புத் தலைவர்களைக் கொலை செய்ய வேண்டுமென ஒரு கும்பல் திட்டமிடுவதாகவும் அந்தக் கும்பல் சென்னையிலிருந்து கொச்சின் செல்லும் ரயிலில் பயணித்து கோவைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கடந்த 1-ம் தேதி, போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், கோவை வந்து இறங்கிய ஐந்துபேர் கொண்ட அந்தச் சதி கும்பலைச் சுற்றி வளைத்து விசாரித்தது போலீஸ்.

இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்தையும் அவரது மகன் ஓம்கார் பாலாஜி மற்றும் இந்து முன்னணியின் கொள்கை பிரச்சார செயலாளர் மூகாம்பிகை மணி ஆகியோரையும் கொலை செய்யும் சதித்திட்டத்தோடு அவர்கள் ஐந்துபேரும் வந்திருப்பதாக  விசாரணையில் உறுதி செய்தது போலீஸ்.

இதனையடுத்து கோவை என்.எச் ரோட்டை சேர்ந்த ஆஷிக், வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (20), சென்னையைச்சேர்ந்த சலாவூதீன் ஆகிய ஐந்துபேரும் 2ம்தேதி, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அர்ஜுன் சம்பத் மற்றும் அவரது சகாக்கள் தொடர்ந்து இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி பேசி வருவதாகவும் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொலை செய்யத் திட்டமிட்டோம் என்று அவர்கள் ஐந்துபேரும் விசாரணையின்போது தெரிவித்ததாக சொல்கிறது போலீஸ்.

அதுமட்டுமல்லாது, அவர்கள் ஐந்துபேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் கூறியுள்ள போலீஸ், விநாயகர் சதுர்த்தி நெருங்குகிற நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் மிகப்பெரிய கலவரமாகியிருக்கும் நல்லவேளை அதைத் தடுத்துவிடோம் என்று நிம்மதி பெருமூச்சுவிடுகிறது போலீஸ். இந்த கைதைத் தொடர்ந்து இந்துமதத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.