பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் பலர் வேலையிழப்பு: டி.கே.ரெங்கராஜன் குற்றச்சாட்டு | physically challenged people meeting Held in Tiruppur

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (03/09/2018)

கடைசி தொடர்பு:11:22 (03/09/2018)

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் பலர் வேலையிழப்பு: டி.கே.ரெங்கராஜன் குற்றச்சாட்டு

``பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மூலமாக திருப்பூர் மாவட்ட பனியன் தொழில்துறையினர் நஷ்டமடைந்து  வேலையிழந்து, பலரும் வேறு ஊர்களுக்கும் சென்றுவிட்டனர்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் குற்றம்சாட்டினார்.

மாநாடு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நடத்தும் 3-வது பொது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று மாவட்ட வாரியான மாபெரும் பேரணியுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி தலைமையேற்றார். மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், NRDP அகில இந்திய தலைவர் முரளிதரன் சிறப்புரையாற்றினர். முதலில் பேசிய ஜான்சிராணி, ``மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகளைப் பெறவேண்டி போராடவே இந்தக் கூட்டம். முன்பு தமிழக அரசுக்கு எதிராக 5 நாள்கள் போராடியபோது 110 விதியின் கீழ் நம் உரிமைகளுக்கான கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. 72 வருட சுதந்திர இந்தியாவில் 15% உள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமைகளைப் போராடி பெறுவது அரசாங்கத்துக்கு அவமானம். மோடி அரசு இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெயராக 'திவ்யங்க்' என வைத்தது. பெயர் மட்டும் மாற்றினால் போதுமா. வருடம் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். 4 வருடத்தில் 8 கோடி பேருக்கும், அதில் 4 சதவிகிதமான 32 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டுமே. வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றும் அரசு. இதை எதிர்க்க அனைவரும் போராட வர வேண்டும்" என்றார்.

மாற்றுத்திறனாளி மாநாடு

மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் பேசுகையில், ``நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன் என்றாலும் கட்சி, ஊர், சாதி, மதபேதமின்றி அனைவருக்கும் உதவியிருக்கிறேன். எங்கள் கட்சியின் சார்பாக முடிந்த வரை மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மூலமாக திருப்பூர் மாவட்ட பனியன் தொழில்துறையினர் நஷ்டமடைந்து வேலையிழந்து, பலரும் வேறு ஊர்களுக்கும் சென்றுவிட்டனர். தமிழகம் முழுக்க இதே நிலைமைதான். தமிழகத்தில் 24,000 மாணவர்கள் தமிழ் வழியில் மருத்துவத்தேர்வு எழுதுகிறார்கள். அதில் கேட்கப்பட்ட 49 கேள்விகளில் பிழை இருந்தது. இந்த வழக்கில் எதிர்தரப்பில் பேசிய மத்திய அரசு வழக்கறிஞர், ``மருத்துவத் தேர்வை ஆங்கிலத்தில்கூட புரிந்துகொள்ள முடியாதவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வேண்டும்" என வாதம் செய்தார். இந்தியா மாநில கூட்டமைப்பு கொண்ட நாடு. இதில் ஒரு மாநில மொழியை மதிக்காமல் மாணவர்களை இழிவு செய்கின்றனர். தமிழக அரசோ ஸ்டெர்லைட் முதல் நீட் வரை எதற்கும் வலுவான எதிர்ப்பு தெரிவிக்காமல் பினாமி அரசுபோல் செயல்படுகிறது. நல்ல அரசாங்கம் அமைந்தால்தான் நாடு உருப்படும்" என்று ஆதங்கத்துடன் முடித்தார்.

திருப்பூரில் நடந்துவரும் மாற்றுத்திறனாளி மாநாடு

தொடர்ந்து சிறப்புரையாற்றிய முரளிதரன் பேசுகையில், ``தமிழகத்தில் சில காலமாக அதிகம் உச்சரிக்கப்படும் 'போராட்டம்' எனும் வார்த்தை புது உத்வேகத்தை அளிக்கிறது. 2014 தேர்தல் வாக்குறுதியில் மோடி அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து, ஊடகம், வளர்ச்சித்துறைகளில் தகுந்த வசதிகள் செய்து தருவதாக கூறினார்கள். அது வெறும் வாய் வார்த்தையாக போய்விட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டப்படி கல்வியில் 5 சதவிகிதம், வேலைவாய்ப்பில் 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார்மயமாக்கல் மூலமாக நிரந்தர வேலை என்பது இல்லாமல்போகும். மத்திய அரசு தேர்வுகளில் இடஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்த வேண்டும். கடைசியாக அறிவித்த மத்திய பட்ஜெட் தாக்கலில்கூட கடந்த வருடத்தைவிட சொற்ப அளவிலான தொகையே மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பென்ஷன் தொகையும் மற்ற மாநிலங்களில் 300 ரூபாயும், டெல்லியில் 2,500 ரூபாயும் தருகிறார்கள். அதை அதிகப்படுத்தி அனைவருக்கும் ஒரே தொகையாக 3,500 ரூபாய் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் அனைத்துக்கும் வரியை ரத்து செய்ய வேண்டும். அடையாள அட்டை 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  எதிர்க்கட்சியினரை வசைபாடும்போதுகூட குருடன், செவிடன் என்று குறிப்பிடுகின்றனர் அரசியல் தலைவர்கள். இது மாற்றுத்திறனாளிகளை இழிவு செய்வது போன்றது. அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. உங்களைச் சந்திக்க வரும் கட்சியினரிடம் உங்கள் எதிர்ப்பை வலுவாக தெரிவியுங்கள்" என்று முடித்துக்கொண்டார்.