வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (03/09/2018)

கடைசி தொடர்பு:10:16 (04/09/2018)

`காய்ச்சல் சொல்லாமல் வருது; கமிஷன் சொல்லிக்கொண்டு வருது' - முதல்வர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்

காய்ச்சல் திடீரென வருவதுபோல் கொள்ளிடம் ஆற்றில் மதகுகள் திடீரென உடைந்துவிட்டது என்று முதல்வர் பழனிசாமி கூறியதற்கு, பதில் அளித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``காய்ச்சல் சொல்லாமல் வருகிறது. கமிஷனைப் பொறுத்தவரை சொல்லிக்கொண்டு வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.

கொள்ளிடம் ஆற்றில் மதகுகளை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு,  திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் திரண்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு  வழங்கினர். இந்த நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி வெள்ளப்பெருக்கினால் மதகுகள் உடைந்த முக்கொம்பு கொள்ளிடம் மேலணையை, முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் சகிதமாக  இன்று காலை 9 மணிக்கு பார்வையிட்ட ஸ்டாலின், கொள்ளிடம் ஆற்றில் மதகுகள் உடைந்த பகுதியில் நடந்து வரும், சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘முக்கொம்பு மதகுபோல்தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடைந்ததைத் தடுத்திருக்கலாம். எந்தவித முன்அறிவிப்பும் இன்றி திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து நீரை திறந்துவிட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அரசின் அலட்சியத்தினால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 24-ம் தேதி முதல்வர் இங்கு பார்வையிட்டு, பணிகள் விரைவில் முடிவடையும் என உறுதி அளித்தார். ஆனால், இன்னும் 40 சதவிகிதம் பணிகூட முடியவில்லை. கடந்தமாதம் 19-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், இதுவரை கடைமடை பகுதிகளுக்கு சென்றடையவில்லை. முக்கொம்பு மேலணையின் மதகுகள் உடைந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

உடைந்த கொள்ளிடம் ஆற்றில் மதகுகளை பார்வையிடும் மு.க.ஸ்டாலின்

ஆய்வுக்கு வந்தபோது, `காய்ச்சல் சொல்லிக்கொண்டு வருவது இல்லை' என அறிவுபூர்வமான கருத்து ஒன்றை முதல்வர் கூறினார். அவர் சொன்ன கருத்து, ரோம் நகரம் தீப்பிடித்து எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததை நினைவுபடுத்துகிறது. நீரோ மன்னனின் வாரிசு போல் முதல்வர் பேசி உள்ளார். காய்ச்சல் சொல்லாமல் வருகிறது கமிஷனைப் பொறுத்தவரை சொல்லிக்கொண்டு வருகிறது. எம்.எல்.ஏ-க்களுக்கு கோடிகோடியாக பணம் கொடுத்து தக்க வைத்துக்கொள்வதில் குறியாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கொள்ளிடம் மேலணை உடைந்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிக்கை வைத்தால் நடக்காது. சட்டமன்றத்தில் தமிழகத்தில் உள்ள கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரியது தொடர்பாகக் கேள்வி எழுப்பி வருகிறோம். இந்நிலையில், நீர்நிலைகள் தூர்வாரியது தொடர்பாக  5 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் தி.மு.க ஆட்சி மலரும். அப்போது இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும்'' என்று கூறினார்.

முக்கொம்பு ஆய்வுக்குப் பிறகு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஏரியைப் பார்வையிட்டவர், அங்கிருந்து திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் மு.க.ஸ்டாலின், திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கும், தாத்தா, பாட்டி படங்களுக்கும் அஞ்சலி செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க