வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (03/09/2018)

கடைசி தொடர்பு:12:50 (03/09/2018)

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், மெரினாவில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, சென்னை மெரினா கடற்கரையை போராட்டம் நடத்தத் தடைசெய்யப்பட்ட பகுதியாக தமிழக அரசு அறிவித்தது. பதற்றமான சூழ்நிலை நிலவும்போதெல்லாம், மெரினாவில் போலீஸ் படை குவிக்கப்படுவதுடன், தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, சென்னை மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக் கோரி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, `ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திட வேண்டும் எனவும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது' என்று கூறி போராட்டம் நடத்த அனுமதி அளித்தார். 

இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினாவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு கடந்த ஏப்ரல் 28-ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் போராட்டம் நடத்த, தனி நீதிபதி அளித்த உத்தரவைத் ரத்து செய்ததுடன், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.