``இதை மட்டும் மாற்றிக்கொண்டால் விவசாயம் லாபகரமான தொழில்!” - அது என்ன மாற்றம்? | farmers have to change this to make farming a profitable profession

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (03/09/2018)

கடைசி தொடர்பு:14:09 (03/09/2018)

``இதை மட்டும் மாற்றிக்கொண்டால் விவசாயம் லாபகரமான தொழில்!” - அது என்ன மாற்றம்?

இதனால்தான் விவசாயம் லாபமில்லாத தொழிலாக விவசாயிகள் நினைக்கிறார்கள். விவசாயிகள் குழுவாக இணைந்து விவசாயம் மற்றும் விற்பனை செய்யும்போது, இது முற்றிலும் மாறுகிறது.

``இதை மட்டும் மாற்றிக்கொண்டால் விவசாயம் லாபகரமான தொழில்!” - அது என்ன மாற்றம்?

 

``இதுவரை இருந்த விவசாயம் வேறு. இனி வரும்காலத்தில் இதே முறையில் விவசாயமும் செய்ய முடியாது. விற்பனையும் செய்ய முடியாது. தனி விவசாயிக்கு இனி வேலையில்லை. குழுக்களாக இணைந்து விவசாயம் செய்யும் விவசாயிகளே வெற்றியை ஈட்டமுடியும். மத்திய, மாநில அரசுகள் கூட்டுப் பண்ணை விவசாயிகளை மையப்படுத்தித்தான் இனி திட்டங்களைத் தீட்டும்‘"

என்கிறார் மாநிலக் கூட்டுப்பண்ணையத் திட்ட ஆலோசகர் வடிவேல்.

விவசாயம் பற்றி திட்ட ஆலோசகர் வடிவேல்

கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் வடிவேல், மாநிலக் கூட்டுப்பண்ணையத் திட்ட ஆலோசகராக இருக்கிறார். ஈரோடு பரிமளம் மஹாலில் நடைபெற்று வரும் பசுமை விகடன் நடத்தும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய வடிவேல், `` ஊர்க்கூடி தேர் இழுத்தால் வந்து சேரும்னு சொல்லுவாங்கள்ல. அது விவசாயத்துக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். தனியொருவனாக இனி விவசாயிகள் சாதிக்க முடியாது. சந்தைப் போட்டி மிகுந்ததாக இருக்கிறது. அதில் வெற்றி பெற விவசாயிகள் தயாராக வேண்டும். விவசாயிகள் குழுக்களாக இணைந்து விவசாயம் செய்ய வேண்டும். விளைபொருள்களை முத்திரையிட்டு விற்பனை செய்ய வேண்டும். இந்தியாவில் விவசாயிகள் மட்டும்தாம், இடுபொருள்களை சில்லறை விலையில் வாங்குகிறார்கள். அதே நேரம் தங்கள் விளைபொருள்களை சில்லறை விற்பனையில் விற்பனை செய்யாமல், மொத்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதனால்தான் விவசாயம் லாபமில்லாத தொழிலாக விவசாயிகள் நினைக்கிறார்கள். ஆனால், விவசாயிகள் குழுவாக இணைந்து விவசாயம் மற்றும் விற்பனை செய்யும்போது, இது முற்றிலும் மாறுகிறது. குழுவாக விவசாயம் செய்யும்போது, மொத்த விலைக்கு இடுபொருள்களை வாங்க முடியும். தங்கள் விளைபொருள்களை நேரடியாக நுகர்வோரிடம் சில்லறை விலையில் விற்பனை செய்ய முடியும். இதனால் விவசாயம் லாபகரமானதாக மாறுகிறது. இந்த ஒரு மாற்றத்தைத்தான் விவசாயிகள் செய்ய வேண்டும். 

20 விவசாயிகள் இணைந்து உழவர் ஆர்வலர் குழு, ஐந்து உழவர் ஆர்வலர் குழுக்கள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் குழுவைத் தொடங்கலாம். பத்து உழவர் உற்பத்தியாளர் குழு இணைந்து உழவர் உற்பத்தியாளர் கம்பெனியைத் தொடங்கலாம். உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மாநில அரசு மூலமாக இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆயிரம் நபர்கள் கொண்ட உழவர் உற்பத்தியாளர் கம்பெனியில் ஒவ்வோர் உறுப்பினரும் 1000 ரூபாய் செலுத்த வேண்டும். இது மொத்தம் 10 லட்சம் ரூபாய் வரும். இதே மதிப்பிலான 10 லட்ச ரூபாய் மத்திய அரசு மூலமாக அந்த கம்பெனிக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சில உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஆயக்குடி கொய்யா மற்றும் பழங்கள் உற்பத்தியாளர் கம்பெனி, ஈரோடு மஞ்சள் உழவன் உற்பத்தியாளர் கம்பெனி, கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை உற்பத்தியாளர்கள் கம்பெனி ஆகியவை சில உதாரணங்கள். 

இனிவரும் காலங்களில் விவசாயிகள் கூட்டாக இணைந்து விவசாயம் செய்யும் கூட்டுப் பண்ணைகளையும், உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளையும் மையப்படுத்தியே மானியங்கள், சலுகைகளை வழங்க அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுப்பண்ணைகளையும், உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளையும் உருவாக்கினால் அத்தனை சலுகைகளையும் பெற முடியும். அத்துடன் தங்கள் விளைபொருள்களுக்கும் லாபகரமான விலையைப் பெற முடியும்‘‘ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்