`உள்நாட்டுக்கு 82 ரூபாய்; வெளிநாட்டுக்கு 38 ரூபாய்!' - பெட்ரோல் விலையால் மு.க.ஸ்டாலின் காட்டம்

“மத்திய அரசின் கண் அசைவில், நாட்டு நலனை பின்னுக்குத் தள்ளி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வானளாவிய அளவுக்கு உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது”என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் மத்திய அரசுக்கு எதிராகப் பலதரப்பிலிருந்து குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின்

 ‘மத்திய அரசின் கண் அசைவில், நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள், தொடர்ந்து கண்களை மூடி செய்துகொண்டிருக்கும் வானளாவிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாய்க்கு மேலும், டீசல் 75 ரூபாய்க்கு மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையிலும், வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் மதிப்பைச் சரி செய்வதற்கு மத்திய அரசு எவ்வித பொருளாதார நடவடிக்கைகளையும் எடுக்காமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதும்; பொதுப் போக்குவரத்து - பொருள் போக்குவரத்து - அத்தியாவசியப் பொருள்களின் விலை போன்ற பல்வேறு முனைகளிலும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, அ.தி.மு.க அரசு விற்பனை வரியைக் குறைப்பது உள்ளிட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருப்பதும் மிகவும் பொறுப்பற்ற செயலாகும்.

ஆகவே, பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த எக்சைஸ் வரியைக் குறைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விற்பனை வரியைக் குறைத்து மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வின் அழுத்தத்தைக் குறைத்திட அ.தி.மு.க அரசு முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கே உள்நாட்டில் எட்டாத உயரத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்திட அனுமதித்துவிட்டு, மத்திய அரசு ஒரு லிட்டர் டீசலை 34 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோலை 38 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்வது என்ன வகை நியாயம்? அந்த முடிவு மிக மோசமான முரண்பாடு இல்லையா. அப்படிச் செய்துகொண்டிருப்பது, தேச நலனை வஞ்சிப்பதாகாதா? போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. எனவே, இவற்றுக்கெல்லாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்’ என்றுக் குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!