காதலனோடு மாயமான இளம்பெண்!- பரிதவிக்கும் பவானிசாகர் எம்.எல்.ஏ! | The girl who is engaged with mla ran away with her lover

வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (03/09/2018)

கடைசி தொடர்பு:19:27 (03/09/2018)

காதலனோடு மாயமான இளம்பெண்!- பரிதவிக்கும் பவானிசாகர் எம்.எல்.ஏ!

ஈரோட்டில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், திருமண ஏற்பாடுகள் நடந்துவந்த வேளையில், காதலனுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எம்.எல்.ஏ

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 83 ஆயிரம் வாக்குகள் பெற்று, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானவர், ஈஸ்வரன். 40 வயதான ஈஸ்வரனுக்கு, கடந்த சில மாதங்களாக திருமணத்துக்கு பெண் பார்த்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், பாவனிசாகர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி தம்பதியின் மகளான சந்தியாவை, எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்குத் திருமணம் செய்ய, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முடிவுசெய்து நிச்சயம் செய்திருக்கின்றனர். வரும் 12-ம் தேதி சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவந்திருக்கின்றன. மேலும், இந்தத் திருமணத்தை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் முன்னின்று நடத்திவைப்பதாகவும் இருந்தது. 

 

இந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி மதியம், சத்தியமங்கலத்தில் உள்ள தன்னுடைய தோழிகளுக்கு பத்திரிகை வைக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மணமகளான சந்தியா, சத்தியமங்கலத்துக்கு வந்து தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். பத்திரிகை வைக்கச் சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்குத் திரும்பாததால், சந்தியாவின் பெற்றோர் போன் செய்துள்ளனர். செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என்று கேட்டுப் பதறிப்போய், உடனடியாக சந்தியாவின் தோழிகளுக்கு போன் செய்து விசாரிக்க, ‘இங்கு அவள் வரவில்லையே’ என குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார்கள். விசாரிக்கையில், ஊத்துக்குளியை அடுத்த கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை சந்தியா காதலித்து வந்ததாகவும், இநந்த் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் காதனுடன் சென்றுவிட்டதும் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, ‘பவானிசாகர் எம்.எல்.ஏ-வுக்கு என்னுடைய மகளை நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகள் நடந்துவரும் வேளையில், என்னுடைய மகளைக் காணவில்லை. என்னுடைய மகளை விக்னேஷ் என்பவர் காதலித்ததாகத் தெரிகிறது. எனவே, காணாமல்போன என்னுடைய மகளை தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும்’ என கண்ணீரோடு சந்தியாவின் தந்தை தங்கமணி கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்து, காணாமல் போன சந்தியாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், திருமணத்துக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில், காதலனுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே, என்ன செய்வது எனத் தெரியாமல் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு எம்.எல்.ஏ., பெரும் சோகத்தில் இருக்கிறாராம்.