வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (03/09/2018)

கடைசி தொடர்பு:17:01 (03/09/2018)

விமானத்தில் தமிழிசைக்கு 'டஃப் ஃபைட்' கொடுத்த பெண்! என்ன ஆச்சு?

விமானத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையுடன் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மோடி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண் மீது தமிழிசை செளந்தரராஜன் போலீஸில் புகார் அளித்தார்.

தமிழிசை

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 1,000 பேர் பா.ஜ.க-வில் இணையும் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இந்த விமானத்தில் கனடாவில் வேலை செய்து வரும், தூத்துக்குடி கந்தன்காலனியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற 23 வயதுப் பெண் ஒருவரும் பயணித்து வந்துள்ளார். இவரது இருக்கை எண் 17. சென்னையிலிருந்து விமானம் ஏறியதும், 3-ம் எண் இருக்கையில் அமருவதற்காக விமானத்துக்குள் வந்த, தமிழிசையைப் பார்த்து “பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக” எனக் கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம்.

விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யாவிடம் தமிழிசை புகார் அளித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நெல்லையில் 1,000 பேர் பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தேன். விமானத்தில் வைத்தே தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற பெண், கைகளை உயர்த்தி என்னைப் பார்த்து, எங்களது கட்சியைப் பற்றியும் பிரதமரைப் பற்றியும் தகாத முறையில் கோஷம் எழுப்பினார். விமானத்தில் வைத்து எதையும் பேசுவது முறையல்ல என்பதால் நான் எதுவும் பேசவில்லை. விமானம் தூத்துக்குடி வந்ததும், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் அந்தப் பெண் வந்தபோது, “விமானத்துக்குள் வைத்து இப்படிப் பேசுவது சரியா” எனக் கேட்டேன். “எனக்குப் பேச்சுரிமை இருக்கிறது. அதனால் நான் பேசுவேன்” என்றபடி மீண்டும் அதே கோஷங்களை எழுப்பினார். இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.    

இது போன்ற கோஷங்களுக்கு நான் பயப்படவில்லை. ஆனால், அவர் சாதாரணப் பயணிபோல எனக்குத் தோன்றவில்லை. அவர் கோஷம் எழுப்பியபோது, என் உயிருக்கே ஆபத்தான சூழல் நிலவியதுபோல உணர்ந்தேன். அவரது பின்புலத்தில் ஏதாவது ஒரு தீவிரவாதி அமைப்பு உள்ளது எனவும் சந்தேகிக்கிறேன். இதுகுறித்து, விமான நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்திடமும் புகார் அளித்துள்ளேன்.

நேர் எதிர் கொள்கை உள்ளவர்கள்கூட அடுத்தடுத்த இருக்கைகளில் ஒரே விமானத்தில் அமர்ந்து சென்றபோதிலும், இதுபோன்று நிகழ்ந்ததில்லை. தூத்துக்குடி நகரம் பலரின் பின்புலத்தால் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நகரம். இந்த நிலையில் இப்படி ஒரு பெண் கோஷம் எழுப்பியது சந்தேகத்தை அதிகரிக்கிறது. தமிழகத்தில் இது போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்றார்.

பெண்மீது புகார் அளித்துவிட்டுச் சென்றதால், கூடுதலாக 30 நிமிடம் தாமதமாகவே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் தமிழிசை. தமிழிசையின் புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க