``சாக்கு இல்லாததால கொள்முதல் பண்ண முடியாது!” - அலட்சியத்தால் வீணாகும் 1000 மூட்டை நெல்

கஷ்டப்பட்டு சாகுபடி செஞ்சி அறுவடை செஞ்ச நெல்லை விற்பனைக்கு எடுத்து வந்தோம். ஆனா, திடீர்னு நெல் கொள்முதல் செய்வதை அதிகாரிங்க நிறுத்திட்டாங்க. இதனால கொள்முதல் நிலையத்துலேயே மூட்டைகளை அடுக்கி வெச்சிருக்கோம்.

``சாக்கு இல்லாததால கொள்முதல் பண்ண முடியாது!” - அலட்சியத்தால் வீணாகும் 1000 மூட்டை நெல்

நாகை மாவட்டம், மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை ரக நெல்லைக் கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்துகொண்டு சென்ற 5000 நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

மாதிரவேளூரில் நேரடிக் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சம்பா நெற்பயிர் மட்டும் இங்குக் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் குறுவை நெல்லை அதிகப்படியாகச் சாகுபடி செய்தனர். எனவே அறுவடை செய்த குறுவை ரக நெல்லையும் நேரடிக் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள் திறக்குமாறு தமிழக அரசுக்குக்  கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்தக் கொள்முதல் நிலையங்களில் நெல் வாங்கப்படுவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு சென்ற 5000 நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சரியான பாதுகாப்பு இல்லாததாலும், இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும் இந்த நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகின்றன. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

நெல் மூட்டைகள்

இது குறித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி சேகரிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``நாங்க கஷ்டப்பட்டு சாகுபடி செஞ்சி அறுவடை செஞ்ச நெல்லை விற்பனைக்கு எடுத்து வந்தோம். ஆனா, திடீர்னு கொள்முதல் செய்றதை அதிகாரிங்க நிறுத்திட்டாங்க. இதனால கொள்முதல் நிலையத்துலேயே மூட்டைகளை அடுக்கி வெச்சிருக்கோம். இங்க அடிக்கடி மழை பெய்யுறதால இந்த மூட்டைங்க எல்லாம் நனைஞ்சி வீணாகுது. நெல் மூட்டைகளை வாங்குறதுக்கு சணல் சாக்கு இல்ல, மூட்டைகளை எடுத்துட்டுப் போக லாரி இன்னும் வரலைன்னு சொல்லி ஒரு வாரமா கொள்முதல் செய்றதை  நிறுத்தி வெச்சிருக்காங்க. இந்த 5000 மூட்டைங்க இல்லாம இன்னும் 10000 நெல் மூட்டைங்க விற்பனைக்கு ரெடியா இருக்கு. ஆனா, கொள்முதல் செய்ய முடியாத நிலையில என்ன பண்றதுனே தெரியல. இதனால எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டுருக்கு" என்றார்.

 மேலும் இது குறித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பொதுச் சங்கச் செயலாளர் ஆறுபாதி கல்யாணத்தின் சார்பில் தமிழக முதல்வரின் நேரடி பார்வைக்குக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் , ``கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், மோட்டா ரக நெல்லையும் கொள்முதல் நிலையங்கள் வாங்க வேண்டும் " என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தண்ணீர் மட்டுமே பிரச்னையில்லை. எளிதில் தீர்க்கக்கூடிய, வராமலே தடுக்கக் கூடிய ஆயிரமாயிரம் பிரச்னைகளும் உண்டு. இயற்கையின் கரிசனத்தில் தண்ணீர் வந்துவிடும். ஆனால், மற்ற பிரச்னைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் கரிசனம் தேவைப்படுகிறது. அது எப்போது கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!