`இனியும் தினகரனுக்கு இடம் கொடுக்கக் கூடாது!' - அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் மெசேஜ் #VikatanExclusive | Edappadi palanisamy's secret message to the ministers

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (03/09/2018)

கடைசி தொடர்பு:16:21 (03/09/2018)

`இனியும் தினகரனுக்கு இடம் கொடுக்கக் கூடாது!' - அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் மெசேஜ் #VikatanExclusive

பன்னீர்செல்வத்துக்கு, தினகரனோடு பழைய பகை இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

`இனியும் தினகரனுக்கு இடம் கொடுக்கக் கூடாது!' - அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் மெசேஜ் #VikatanExclusive

தினகரனுக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளனர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள். `தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்குக்கூட தினகரனுக்குச் செல்வாக்கில்லை என்பதை மக்களிடம் சுட்டிக்காட்டுங்கள்' என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

மன்னார்குடியில் கடந்த 1-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் தினகரனைக் கடுமையாகச் சாடிப் பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் பேசும்போது, 'தினகரன் என்னைத் துரோகி என்கிறார். தினகரன் என்ன பெரிய தியாகியா? அ.தி.மு.க-வுக்காக என்ன மாதிரியான தியாகத்தை அவர் செய்திருக்கிறார். ஜெயலலிதாவுடன் 33 வருடங்களாக இருந்தோம் என்கிறார்கள். இவர்கள் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற சதி செய்ததை ஜெயலலிதா அறிந்துகொண்டதால்தான் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். அ.தி.மு.க மீது உரிமை கொண்டாடுவதற்கு இவர் யார்? ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே முதல்வராகச் சதி செய்தவர்தான் தினகரன்' எனக் கொந்தளித்தார். இதற்குப் பதில் அளித்த தினகரன், 'மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் பன்னீர்செல்வம். அவர் பேசுவது எல்லாம் உண்மையல்ல என்பதை மக்கள் அறிவார்கள். பதவி வெறியில் அவர் பேசுகிறார். தி,மு.க-வுடன் கைகோத்துக்கொண்டே இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். பின்னர், டெல்லியிலிருந்து உத்தரவு வந்தவுடன் இந்த ஊழல் ஆட்சியுடன் சேர்ந்துகொண்டு பதவியை அனுபவிக்கிறார். அவரது நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. நான் சதி செய்ததாகக் கூறுகிறார். இதை யாரும் நம்ப மாட்டார்கள்' என்றார். 

"பன்னீர்செல்வம் மட்டுமல்ல, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போதும், 'சைக்கிள் பேரணி நடத்தக்கூட ஆள் இல்லாதவர் தினகரன்' என்றார். ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டவர்களும் தினகரனுக்கு எதிராகப் பேசத் தொடங்கிவிட்டனர். இதற்குக் காரணம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிவுரைதான்" என விவரித்த அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், "திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த இரண்டு தொகுதியிலும் ஆர்.கே.நகர் ஃபார்முலாவை அமல்படுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டார் தினகரன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இவ்விரு தொகுதி தேர்தல்களும் அமைய இருக்கிறது. இதிலும், வெற்றிக் கோட்டைத் தவறவிட்டுவிட்டால் தினகரனின் ஆட்டம் அதிகரித்துவிடும் என நினைக்கிறார் முதல்வர். இதன் வெளிப்பாடாக அனைத்து அமைச்சர்களுக்கும் முக்கியத் தகவல் ஒன்றை அனுப்பினார். 

டி.டி.வி.தினகரன்

அதில், 'தமிழக அளவில் தினகரனுக்கு எந்தவித செல்வாக்கும் இல்லை. மாநில அளவில் போராட்டம் நடத்தி, செல்வாக்கை நிரூபிக்க முடியுமா எனத் தினகரனுக்குச் சவால்விடுங்கள். அ.தி.மு.க-வின் 95 சதவிகித கட்சிக்காரர்களும் நம் பக்கம்தான் உள்ளனர். மீதமுள்ள 5 சதவிகிதம் பேரை வைத்துக்கொண்டு அவர் செயல்படுகிறார். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதையே சாதகமாக எடுத்துக்கொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள மைனாரிட்டிகளை ஒன்று திரட்டிக் கூட்டம்போட்டு வருகிறார். மற்றபடி, அரசியல் கட்சியாகச் செயல்படுவதற்கு அவரிடம் சொல்லிக்கொள்ளும்படியான கூட்டம் இல்லை. மொத்தமாகப் பார்த்தாலும் 25 சதவிகித இடங்களில்தான் அவருக்கு ஓரளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது. அமைப்புரீதியாக அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டுங்கள்' எனத் தெரிவித்திருக்கிறார்.

இதன் அடுத்தகட்டமாக, தினகரனைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் பன்னீர்செல்வம். அதாவது, 'அ.தி.மு.க-வில் இன்னமும் தனக்குத் தொடர்பிருக்கிறது என்பதைப்போல தினகரன் செயல்பட்டு வருகிறார். அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் அ.ம.மு.க என்ற கட்சியின் நிர்வாகியாக இருக்கிறார். அதை வளர்க்கும் முயற்சியில் இறங்கட்டும். அ.தி.மு.க-வுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அவரை எதிர்த்து ஆர்.கே.நகரில் 27 சதவிகித வாக்குகளை வாங்கிய எங்களால், திருப்பரங்குன்றம், திருவாரூரில் 35 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகளை வாங்க முடியும்' என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாகவே அமைச்சர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்" என்றார் விரிவாக. 

"பன்னீர்செல்வத்துக்கு, தினகரனோடு பழைய பகை இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தகுதிநீக்க வழக்கு, தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட புகார்கள் எனக் கட்சித் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் சிறந்த முறையில் செயல்படுவதற்கு அவர் தடையாக இருக்கிறார் என்ற கோபம், முதல்வருக்குள் இருக்கிறது. வரக்கூடிய இடைத்தேர்தலில் கோட்டைவிட்டுவிட்டால், அ.தி.மு.க-வின் அடிப்படைத் தொண்டர்கள் இடம் மாறுவதற்கான சூழல்கள் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினாலேயே, தினகரனுக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 


[X] Close

[X] Close