வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (03/09/2018)

கடைசி தொடர்பு:16:18 (03/09/2018)

`அவை நாய்கள் அல்ல... என் குழந்தைகள்’ - போலீஸ் நிலையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கண்ணீர்

நாய்கள்

சென்னையில் செல்லமாக வளர்த்த இரண்டு நாய்கள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தன. டாக்டரின் தவறான சிகிச்சை எனக் கூறி குமரன்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, மேற்கு மாம்பலம், பன்னீர்செல்வம் நகரைச் சேர்ந்தவர் மோசஸ். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவர், கடந்த 9 ஆண்டுகளாக `பாப்பு' என்ற பெண் நாயை வளர்த்துவந்தார். பாப்புவின் குழந்தை புஜ்ஜிமா. புஜ்ஜிமாவுக்கு 6 வயது. இவை இரண்டும் மோசஸ் வீட்டின் செல்லப்பிராணிகள் அல்ல. குழந்தைகள் போலவே வளர்க்கப்பட்டன. 

இந்தநிலையில், புஜ்ஜிமாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், புஜ்ஜிமாவை சைதாப்பேட்டை கால்நடை அரசு மருத்துவமனைக்கு மோசஸின் மகன் யோபுராஜன் அழைத்துச்சென்றார். அங்கு புஜ்ஜிமாவுக்கு ஊசி போடப்பட்டது. தொடர்ந்து, பாப்புக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால், பாப்புவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார் மோசஸ். அங்கு அதற்கும் ஊசி போடப்பட்டுள்ளது. இரவு 9 மணியளவில் பாப்பு இறந்துவிட்டது. இதனால் மோசஸ் உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். பிறகு, வீட்டின் அருகில் குழிதோண்டி பாப்புவை புதைத்தனர். இதையடுத்து புஜ்ஜிமா அதிகாலை 1.30 மணியளவில் இறந்தது. இதனால் மோசஸ், சிகிச்சை அளித்த டாக்டர் மீது ஆத்திரமடைந்தார். உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்தார். அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி அதிகாலையில் குமரன்நகர் போலீஸ் நிலையத்துக்குச் சென்றார். அங்கு தன்னுடைய இரண்டு செல்லப்பிராணிகளான பாப்பு, புஜ்ஜிமா ஆகியோர் மரணத்துக்கு நீதி கேட்டு கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். 

 நாய்களுடன் மோசஸ்

தொடர்ந்து புதைக்கப்பட்ட பாப்புவை தோண்டியெடுத்த மோசஸ், பாப்பு, புஜ்ஜிமா ஆகிய இரண்டு நாய்களையும் பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு காரில் எடுத்துச் சென்றார். அங்கு இரண்டு நாய்களுக்கும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான ரிப்போர்ட்டை 15 நாள்களுக்குப்பிறகு தருவதாக வேப்பேரி கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ரிப்போர்ட் கிடைத்தப்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார் மோசஸ். 

 அவரிடம் பேசினோம். ``பாப்பும் புஜ்ஜிமாவும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களைப் போலதான் வளர்த்தோம். எங்கள் தெருவில் உள்ள அனைவருக்கும் பாப்புவையும் புஜ்ஜிமாவையும் அதிகம் பிடிக்கும். தற்போது அவை இல்லாத எங்கள் வீடு மட்டுமல்லாமல் தெருவே வெறிச்சோடி காணப்படுகிறது. இன்றுகூட வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. பாப்புக்கும் புஜ்ஜிமாவுக்கும் சைதாப்பேட்டையில் என்ன சிகிச்சை அளித்தார்கள் என்று தெரியவில்லை. வழக்கமாக அதை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்குதான் அழைத்துச்செல்வோம். வேப்பேரி கால்நடை மருத்துவமனையிலும் பாப்பு, புஜ்ஜிமாவைத் தெரியாதவர்கள் கிடையாது.  பாப்பு, புஜ்ஜிமா, என் குழந்தைகள். பாப்பு, புஜ்ஜிமா மரணத்துக்கு நீதிகிடைக்கும்வரை போராடுவேன்" என்று கண்ணீர் மல்க கூறினார். 

 இதுகுறித்து சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை டாக்டர்களின் விளக்கத்தை கேட்க முயற்சிசெய்தோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. 

பொதுவாக தவறான சிகிச்சை அளித்து மரணம் ஏற்பட்டால்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்படும். ஆனால், குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் நாய்கள் மரணத்துக்காக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.