திருடிய வீட்டில் நகைகளை வீசிச்சென்ற திருடர்கள்! சென்னையில் நடந்த ஆச்சர்ய சம்பவம்

கொள்ளை


சென்னை, செம்பியத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட 70 சவரன் நகைகளைப் போலீஸாருக்குப் பயந்து திருடிய வீட்டின் முன்பு திருடியவர்களே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். 

சென்னை, செம்பியம், தர்கா தெருவைச் சேர்ந்தவர் இக்பால். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரின் மனைவி இம்தியாஸ். இவர் மட்டும் முதல் மாடியில் தனியாகக் குடியிருந்துவருகிறார். இம்தியாஸ் குடியிருக்கும் வீடு, மூன்று மாடிகளைக் கொண்டது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இம்தியாஸ், ராயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் யாரும் இல்லாதபோது பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், 70 சவரன் நகை, 10,000 ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

வீடு திரும்பிய இம்தியாஸ், பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவிலிருந்த நகை, பணம் கொள்ளைபோனது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். தனிப்படை அமைக்கப்பட்டு திருடர்களைப் போலீஸார் தேடினர். போலீஸாரின் தேடுதல் தீவிரமடைந்ததையடுத்து திருடர்கள் பயந்தனர். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு இம்தியாஸ் வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது சிறிய துணி மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்து திறந்துபார்த்த இம்தியாஸுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அதாவது, திருடப்பட்ட நகைகள் அப்படியே அதில் இருந்தது. இதுகுறித்து அவர் செம்பியம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் துணி முட்டையிலிருந்த கைரேகைப் பதிவு செய்தனர். அதன்மூலம் போலீஸார் திருடர்களைத் தேடி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!