``காவிரி வெள்ளம் சேர்த்த மணலை அமைச்சர் விஜயபாஸ்கர் பேரைச் சொல்லித் திருடப் பார்க்குறாங்க!'' - கரூரிலிருந்து அபயக் குரல்!

"காவிரி வெள்ளம் இந்தப் பாலங்களின் அருகே ஆறடி உயரத்துக்கு மணலைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. மக்களுக்கோ அது மெரினா பீச்போல குஷியை ஏற்படுத்த... அதைக் காசாக்க நினைக்கிறார்கள், உள்ளூர் ஆளும் கட்சியைச் சேர்ந்த மணல் மாஃபியாக்கள்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

``காவிரி வெள்ளம் சேர்த்த மணலை அமைச்சர் விஜயபாஸ்கர் பேரைச் சொல்லித் திருடப் பார்க்குறாங்க!'' - கரூரிலிருந்து அபயக் குரல்!

``கணக்கு வழக்கில்லாமல் நடைபெற்ற மணல் கொள்ளையால்தான் முக்கொம்பு கொள்ளிடம் தடுப்பணையும் இரும்புப் பாலமும் உடைந்தது" என்று சூழலியலாளர்கள் குற்றம்சாட்டி வரும் வேளையில், "கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவுட்டுப்பாளையம் காவிரியாற்றுப் பாலங்களில் காவிரி வெள்ளம் கொண்டுவந்து சேர்த்திருக்கும் மணலைக் காசாக்க நினைக்கிறார்கள் உள்ளூர் மணல் மாஃபியாக்கள்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

காவிரி ஆறு

``கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண்-7 கரூர் மாவட்டம் வழியாகச் செல்கிறது. இந்தச் சாலையில் கரூர் தவுட்டுப்பாளையம் முதல் நாமக்கல் மாவட்டத்தின் பரமத்திவரை காவிரியில் 1951-ல் கட்டப்பட்ட பழைய பாலம் ஒன்றும், 2008-ல் கட்டப்பட்ட புதிய பாலம் ஒன்றும் உள்ளன. தமிழகப் போக்குவரத்தில் இவை முக்கியமான பாலங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், கடந்த மூன்று வருடங்களாகக் கருர் மாவட்டத்தில் முறைகேடாக மணலை அள்ளி வந்த ஆளும் கட்சியினர், இந்தப் பாலம் உள்ள தவுட்டுப்பாளையம் அருகே மணல் குவாரி திறக்கவைக்க முயன்றனர். ஆனால், 'இயற்கைப் போராளி' முகிலன் தலைமையிலான காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கடுமையாகப் போராடியதுடன், 'இங்கு மணல் குவாரி அமைத்தால் இந்தப் பாலங்கள் சிதையும்; இந்தப் பகுதியின் குடிநீர் ஆதாரமும் பாழாகும்' என்று எதிர்த்து மணல்குவாரி அமைக்கவிடாமல் செய்தது. ஆனால், மணல் மாஃபியாக்கள் இரவு நேரத்தில் இங்கே மணலைச் சுரண்டி அள்ளி, பாலங்களின் அஸ்திவாரத்தை ஆட்டம்காண வைத்தனர். பாலங்களின் மேற்கிலும் கிழக்கிலும், பாறைகளும் களிமண்ணும் தெரியுமளவுக்குப் பல அடி ஆழத்துக்கு மணலைச் சுரண்டி அள்ளினார்கள். இதனால், இந்தப் பாலங்களின் அஸ்திவாரமே ஆட்டம் காணும் நிலைக்குப்போனது. இந்தச் சூழலில்தான், இந்த வருடம் கர்நாடகாவில் கடுமையான மழைப்பொழிவு இருந்ததுடன், காவிரியிலும் வெள்ளம் போகுமளவுக்கு நீர்வரத்து இருந்தது. காவிரி வெள்ளம் இந்தப் பாலங்களின் அருகே ஆறடி உயரத்துக்கு மணலைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. மக்களுக்கோ அது மெரினா பீச்போல குஷியை ஏற்படுத்த... அதைக் காசாக்க நினைக்கிறார்கள், உள்ளூர் ஆளும் கட்சியைச் சேர்ந்த மணல் மாஃபியாக்கள்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஆற்று மணல்

இதுபற்றி காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான விஜயன், "கடந்த மூன்று வருடங்களாக இந்தப் பாலங்களின் அருகே நடந்த மணல் கொள்ளையைப் பார்த்து நாங்கள் பயந்துபோனோம். இங்கே இந்தப் பாலங்கள் இடிந்துவிழுகிற அளவுக்குப் பல அடி ஆழத்துக்கு மணலை அள்ளினார்கள். அதை, தடுக்கப் போராடிய எங்கள்மீது வழக்குப் போட்டது காவல்துறை. ஆனால், மணல் அள்ளியவர்களை எதுவும் செய்யவில்லை. 'இந்தப் பாலங்களை இனி யாரும் பாதுகாக்க முடியாது' என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையிலதான், காவிரியில் வந்த அதிகமான நீர்வரத்தால் மணல் இங்கே பீச்போலக் குவிந்திருக்கிறது. அஸ்திவாரம் தெரியுமளவுக்குப் போன பாலத்தின் தூண்கள் தற்போது குவிந்திருக்கும் மணல் மேட்டால் மூடப்பட்டிருக்கிறது. காவிரியில் இப்போது பாதி ஆறுதான் தண்ணீர் வருகிறது. இந்த மணல் திட்டு காவிரியின் தென்கரை ஓரங்களில் சேர்ந்திருக்கிறது.

இந்தப் பகுதியில் மணல் அள்ளியதால் ஏற்பட்ட பல மரணக்குழிகள், அந்த மணலால் தற்போது மூடப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும்விட பாலங்களின் மேற்கிலும் கிழக்கிலும் மணல் மேடு உருவாகி பீச்போலக் காட்சியளிக்கிறது. இங்குள்ள மக்கள் மாலை நேரங்களில் அந்த மணலில் அமர்ந்து பொழுதுபோக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், இங்கே களிமண், பாறைகள் தெரியுமளவுக்கு மணலை அள்ளிய அதே கும்பல், இப்போதும் இந்த மணலை அள்ளக் காத்திருக்கின்றனர். அமைச்சர் ஒருவரின் பெயரையும் அ.தி.மு.க கரூர் ஒன்றியச் செயலாளர் ஒருவரின் பெயரையும் பயன்படுத்தி இந்த மணலை அள்ளுவதற்கு அந்தக் கும்பல் தயாராகவிருக்கிறது. உண்மையில், அந்த இரண்டு பேருமே அள்ளச் சொல்கிறார்களா... அல்லது அவர்கள் பெயரைப் பயன்படுத்தி இவர்களே அள்ளப் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இங்கே ஒரு கைப்பிடி மணலைக்கூட அள்ளவிட மாட்டோம். மாவட்ட நிர்வாகம் உடனே இதில் தலையிட்டு இங்கே மணல் அள்ளத் துடிப்பவர்களுக்கு கடிவாளம் போட வேண்டும். இல்லையென்றால், இந்தப் பாலங்களையும் இங்குள்ள மக்களுக்குத் தேவையான குடிநீர் ஆதாரத்தையும் பாதுகாக்க முடியாமல் போகும். வெள்ளம் வரும் முன் அணை போடுவதுபோல, இந்த மணல் கொள்ளை போகும் முன் தடுக்க வேண்டும். மீறி இங்கே மணல் அள்ளினால், முக்கொம்பு தடுப்பணைபோல இந்தப் பாலங்கள் இடிந்துவிழும் நிலை ஏற்படலாம்" என்றார் ஆக்ரோஷமாக. 

மணல்

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் பேச முயன்றோம். முடியவில்லை. அவர் சார்பாக நம்மிடம் பேசிய சிலர், "அண்ணன் ( எம்.ஆர்.விஜயபாஸ்கர்) யாரையும் மணல் அள்ளச் சொல்லி அனுமதிக்கவில்லை. அவர், காவிரியில் மணல் கொள்ளை போவதை விரும்பாதவர். 'மணல் கொள்ளை நடத்துபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாவட்ட நிர்வாகத்தையும் காவல் துறையையும் முடுக்கிவிட்டிருக்கிறார். அப்படியிருக்கையில், அவர் அனுமதி கொடுத்தார் என்று சொல்வது தவறான குற்றச்சாட்டாகும்" என்றார்கள்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன், விஜயன்

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் கவனத்துக்கு இந்த மணல் விவகாரத்தைக் கொண்டுசென்றோம். நாம் சொன்னவற்றைக் கேட்டு அதிர்ந்தவர், "அங்கே மணல் அள்ளக் கூடாதே. உடனே அங்குள்ள லோக்கல் காவல் துறைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவலை பாஸ் செய்து, கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வைக்கிறேன். அங்கே கைப்பிடி மணலைக்கூட மாவட்ட நிர்வாகம் அள்ள அனுமதிக்காது" என்றார் உறுதி மேலிட.

 "வார்த்தைகளில் இருக்கும் உறுதி, எடுக்கும் நடவடிகையிலும் இருக்க வேண்டும்'’ என்கிறார்கள் மக்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!