`ரஜினிதான் சாய்ஸ்; ஸ்டாலின் அல்ல!' - ஜி.கே.வாசனைக் கடுப்பேற்றிய அறிவாலய சந்திப்பு | 'Rajini is the only Choice; Not Stalin!'- G.K.vasan angry on his party cadres activity

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (03/09/2018)

கடைசி தொடர்பு:18:40 (03/09/2018)

`ரஜினிதான் சாய்ஸ்; ஸ்டாலின் அல்ல!' - ஜி.கே.வாசனைக் கடுப்பேற்றிய அறிவாலய சந்திப்பு

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. ரஜினி கட்சி தொடங்கினால், அவருடன் கூட்டணி வைப்பதுகுறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம்.

`ரஜினிதான் சாய்ஸ்; ஸ்டாலின் அல்ல!' - ஜி.கே.வாசனைக் கடுப்பேற்றிய அறிவாலய சந்திப்பு

தி.மு.க தலைவராகத் தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர், த.மா.கா-வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள். 'காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருக்கும்போது, நாம் ஏன் வலுக்கட்டாயமாகச் சென்று சந்திக்க வேண்டும்?' என அக்கட்சிக்குள்ளேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

`மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறோம். அறிவாலயத்தில் அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை வருமாறு சொல்லியிருக்கிறார்கள்' என முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கோவை தங்கம், விடியல் சேகர் உள்ளிட்டோர் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனிடம் கூறியுள்ளனர். அவரும், `அப்படியா... நேராகக் கட்சி அலுவலகத்துக்கு வந்துவிடுங்கள். இங்கிருந்தபடியே, அறிவாலயத்துக்குப் போன் செய்து வரலாமா எனக் கேளுங்கள். கூப்பிட்டால் போங்கள்' எனத் தெரிவித்திருக்கிறார். அவர்களும், `ஒரு மணிநேரத்தில் சந்தித்துவிட்டு வந்துவிடுகிறோம்' எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அங்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகே, த.மா.கா நிர்வாகிகளைச் சந்தித்தார் ஸ்டாலின். இதன் பிறகு நடந்த விவரங்களை நம்மிடம் விவரித்தனர் த.மா.கா-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர்...  

"காங்கிரஸ் கட்சியின் கோஷ்டித் தலைவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோன்ற கலாசாரம் த.மா.கா-வுக்குள்ளும் வந்துவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. தலைவராகத் தேர்வான ஸ்டாலினுக்குக் கடந்த 29-ம் தேதி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ஜி.கே.வாசன். `மாலை 6.30 மணிக்குள் வந்துவிடுங்கள்' என நேரம் கொடுத்திருந்தார் ஸ்டாலின். இருப்பினும், 15 நிமிடம் தாமதமாகத்தான் சென்றார் ஜி.கே.வாசன். பிற பணிகள் இருந்தாலும் துரைமுருகனோடு வந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார் ஸ்டாலின். இருவருக்கும் மூவர்ணக் கொடி நிறத்தினால் ஆன மாலையை அணிவித்தார் ஜி.கே.வாசன். இத்துடன் எங்கள் கட்சி சார்பில் அளிக்கப்படவேண்டிய மரியாதை நிறைவடைந்துவிட்டது.

அறிவாலய சந்திப்பு

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. நாங்களும் ரஜினி கட்சி தொடங்கினால், அவருடன் கூட்டணி வைப்பதுகுறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், எங்கள் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், ஸ்டாலினை சந்திக்க விரும்பியதை சரியான விஷயமாகப் பார்க்க முடியவில்லை. இந்தச் சந்திப்பில் ஸ்டாலினிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், '96-ம் ஆண்டு அமைந்ததைப்போல வரக்கூடிய தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்று முதல்வராக அமர்வீர்கள். இது நிச்சயம்' எனக் கூறினார். வெளியில் வந்த பிறகும், 'கட்சி சார்பாக வாழ்த்துகளைக் கூற வந்தோம்' எனப் பேட்டியளித்தனர். இந்தச் சந்திப்பை எங்கள் தலைமை ரசிக்கவில்லை" என்றவர்கள், 

"தி.மு.க-வோடு நாங்கள் கூட்டணி உறவில் இல்லை. ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, ஸ்டாலின் அழைப்பின்பேரில் அவரைச் சந்திக்கச் சென்றார் ஜி.கே.வாசன். 'இது அரசியல் ரீதியான சந்திப்பு எனப் பத்திரிகையாளர்களிடம் கூறுங்கள்' என அவரே தெரிவித்தார். அதையொட்டியே ஜி.கே.வாசனும் பேட்டியளித்தார். ஆனால், அடுத்த சில மணித்துளிகளில், 'வாசன் அவருடைய கருத்தைத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடன் எங்கள் கூட்டணி தொடர்கிறது' என அன்பழகனை விட்டுப் பேச வைத்தார் கருணாநிதி. இது எங்களுக்கு மோசமான அனுபவமாக அமைந்தது. த.மா.கா-வுக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. 'திராவிடக் கட்சிகள் வேண்டாம்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். கருணாநிதி இருக்கும்போதே ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்தது தி.மு.க. ஸ்டாலின் தலைவரான பிறகு எந்தவித முன்னேற்றமும் அந்தக் கட்சிக்குள் வந்துவிடப் போவதில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். அப்படியிருக்கும்போது, கோவை தங்கம் உள்ளிட்டவர்கள் வலுக்கட்டாயமாகச் சென்று ஸ்டாலினை சந்திக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது' என்ற கேள்வி கட்சிக்காரர்கள் மத்தியில் எழுந்துள்ளது" என்றனர் விரிவாக.