`இது உழைப்புக்குக் கொடுக்குற மரியாதை..!’ - வைரலான இன்விடேஷனால் நெகிழும் தஞ்சாவூர்காரர் | Viral invitation - Anish behind this creativity

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (03/09/2018)

கடைசி தொடர்பு:18:37 (03/09/2018)

`இது உழைப்புக்குக் கொடுக்குற மரியாதை..!’ - வைரலான இன்விடேஷனால் நெகிழும் தஞ்சாவூர்காரர்

சமீபத்தில் புதுமனை புகுவிழா அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலானது. அழைப்பிதழில் உறவினர்களின் பெயருக்குப் பதில் வீடு கட்டிய மேஸ்திரி, கொத்தனார், தச்சர், பெயின்டர் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அந்த அழைப்பிதழ் வித்தியாசமாக மட்டுமல்ல சிந்திக்கும்படியும் இருந்தது.

அழைப்பிதழ்
 

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக ஊடகங்களிலும் அழைப்பிதழ் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் கிரியேட்டிவ் அழைப்பிதழுக்குச் சொந்தக்காரரான தஞ்சாவூர்காரர் அனிஷை தேடிப்பிடித்துப் பேசினோம்...

அனிஷ்
 

`நான் தனியார் நிறுவனத்துல வேலை செய்றேன். அப்பா தவறிட்டாங்க. அம்மாதான் வளர்த்தாங்க. சொந்த வீடு என்னோட 15 வருட கனவு. வீட்டுக்கு பூமி பூஜை செய்த நாளிலிருந்தே மேஸ்திரி, கொத்தனார் எல்லாருமே என்கூட இயல்பா அன்பா பேசுவாங்க. கிரகப்பிரவேச அழைப்பிதழ்ல அவங்க பெயர் போடணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். இந்த அழைப்பிதழ் இவ்வளோ வைரலாகும்னு நெனச்சிக்கூட பார்க்கல. வைரலாகணும்னு நெனச்சு இத பண்ணல. உழைப்புக்கு மரியாதை கொடுக்கணும்னு தோணுச்சு. எனக்கு வீடு கட்ட உதவிய அனைவரையும் சந்தோஷப்படுத்தணும்னு நெனச்சேன். உறவினர்கள் மேல நிஜத்துல நல்ல மரியாதை இருக்கு. அழைப்பிதழ்ல அவங்க பெயர் போடுறதுல ஈடுபாடு இல்ல. என்னோட திருமண பத்திரிகையிலும் உறவினர்கள் பெயர் போடல.  

அனிஷ்

அனிஷின் கல்யாணப் பத்திரிக்கை..
 

என் அம்மா மற்றும் மனைவி கிரகப்பிரவேச அழைப்பிதழைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. என் உறவினர் ஒருவர்தான் இந்த அழைப்பிதழைப் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்-ல அவரின் நண்பருக்கு பகிர்ந்தார். மறுநாள் காலைல அவ்வளோ மெசேஜ், அழைப்பிதழ் நல்லா இருக்குன்னு. வரும் 16-ம் தேதிதான் கிரகப்பிரவேசம். இன்னும் நிறைய பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கல. ஆனா, அவங்க எல்லாருக்கும் வாட்ஸ் அப்-ல அழைப்பிதழ் ஃபார்வேட் ஆகியிருக்கு. நினைக்கவே சந்தோஷமா இருக்கு. இதுல ஹைலைட் என்னன்னா நான் எந்த உழைப்பாளர்கள சந்தோஷப்படுத்தணும்னு நெனச்சேனோ அவங்களுக்கு இந்த அழைப்பிதழ் பத்தி தெரியாது. வைரலானதும் தெரியாது. கொத்தனார். உதவியாளர்கள் அனைவருக்கும் இனிமேதான் அழைப்பிதழ் கொடுக்கணும்’ என்றார் பூரிப்புடன்.

வீடு

அனிஷின் புது வீடு..
 

அனிஷின் அழைப்பிதழ் ஐடியா வித்தியாசமாக இருந்ததால் மட்டும் வைரலாகவில்லை. இன்றைய காலகட்டத்தில் அழைப்பிதழுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பிரத்யேகமாக வடிவமைக்கின்றனர். அனிஷ் வடிவமைப்புக்கு மெனக்கெடவில்லை. உறவினர்கள் பெயர் குறிப்பிட வேண்டிய இடத்தில் உழைப்பாளர்களின் பெயர்களை அச்சிட்டதுதான் அவருக்கு குவியும் பாராட்டுகளுக்கு காரணம். அந்த மனசு உண்மையில் பெருசுதான்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க