வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (03/09/2018)

கடைசி தொடர்பு:18:41 (03/09/2018)

``மாணவர்களை அடிக்கக் கூடாது; திட்டக் கூடாது" என வலியுறுத்திய தாய்த்தமிழ்ப் பள்ளி தமிழ்க்குரிசில் மரணம்!

"மாணவர்களை அடிக்கக் கூடாது, திட்டக் கூடாது என்பது எங்கள் பள்ளியின் முதல் விதி. அதைத்தான் அய்யாவும் விரும்புவார். வருடந்தோறும் சுற்றுலா செல்லும்போது உடன்வந்து உற்சாகப்படுத்துவார். அவர் இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை."

``மாணவர்களை அடிக்கக் கூடாது; திட்டக் கூடாது

தாய்மொழியைக் காத்திட மாபெரும் போராட்டங்களை நடத்திய மண், தமிழ்நாடு. கட்டாய இந்தித் திணிப்பின்போது தன் உயிரையும் கொடுத்துத் தடுத்த வரலாறு, தமிழர்களுக்கு உண்டு. இன்றும் பல சவால்களைச் சந்திக்கும் சூழலில், அடுத்த தலைமுறைக்கு இம்மொழியையும் மொழிப்பற்றையும் கடத்திவிட வேண்டும் எனத் தன் வாழ்நாளை ஒப்புக்கொடுப்பவர்கள் பலர். அவர்களுள் ஒருவர்தான், தமிழ்க்குரிசில். மேட்டூரில் தாய்த்தமிழ்த் தொடக்கப் பள்ளியை நிறுவி, வெற்றிகரமாக நடத்திவந்தவர். மொழி காக்கும் பல செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இன்று காலை இறந்துவிட்டார். 

தமிழ்க்குரிசலின் நண்பரும், இவரைப் போலவே கோபிச்செட்டிப்பாளையத்தில் தாய்த்தமிழ்ப் பள்ளியை நடத்திவரும் குமணனிடம் பேசினோம். "தமிழ்க்குரிசில், யார் மனமும் புண்படாமல் பலரையும் ஒருங்கிணைக்கும் தனித்துவமான குணம் படைத்தவர். வேதியியல் படித்துவிட்டு, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணியாற்றினார். தமிழ் மொழி மீதான ஆர்வமே, எங்களைப் போன்றோரை ஒரு களத்தில் இணைத்தது. 1998-ம் ஆண்டு, மேட்டூரில் தனது தாய்த்தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினார். அன்றைய தினம்தான் அவருக்கு மகன் பிறந்தான். அவருக்கு ஒரே நாளில் இரண்டு பிள்ளைகள் கிடைத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்குச் சொந்த பிள்ளையைக் கவனிப்பதுபோலவே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். கட்டணக் கல்வியாகத்தான் பள்ளியைத் தொடங்கினார். ஆனால், அந்தப் பகுதியில் உள்ளவர்கள் எளிய பொருளாதார மக்கள் என்பதால், இலவசக் கல்வியாக மாற்றிவிட்டார். இது சாதாரணமான விஷயமா, அதற்கான பொருளாதார தேவைக்காக தம் உழைப்பில் கிடைத்த பணம் அனைத்தையும் செலவழித்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இயங்கிவந்த தாய்த்தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் `தாய்த்தமிழ்க் கல்விப் பணி' குழுவின் மாநிலச் செயலாளராகச் செயல்பட்டார். அதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றிவந்தார். அரசு அதிகாரிகளைச் சந்தித்து தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி பெறுவதில் முழு முயற்சியை எடுத்தார்.

தமிழ்க்குரிசில்

சொல் ஒன்றும் செயல் வேறாகவும் இருப்பவர் அல்ல தமிழ்க்குரிசில். தன் மகள் மற்றும் மகனையும் தம் பள்ளியிலேயே தமிழ் வழிக்கல்வி படிக்கவைத்தார். மகள் செம்மலர், இப்போது பல் மருத்துவர். மகனான வளன், திருச்சியில் NIT-யில் பி.டெக் கெமிக்கல் இன்ஜினீயருக்குப் படிக்கிறார். இன்று விடியற்காலையிலேயே நான் விழித்துக்கொண்டேன். பள்ளி சார்ந்த பொருளாதார நெருக்கடிகளால் மன உளைச்சலாக இருந்தது. இதே நிலையில்தான் தமிழ்க்குரிசிலும் இருந்திருக்கக்கூடும். அவரின் மரணச் செய்தி என்னை உலுக்கிவிட்டது. அவர்போல ஒருவரை இனிமேல் பார்ப்பது அரிது" என்கிறார் தழுதழுத்த குரலில்..

தமிழ் செம்மலர்

தமிழ்க்குரிசில் மகள் செம்மலர் ஏற்கெனவே நம்மிடம் தந்த பேட்டியில், `அப்பா பல கூட்டங்களுக்கு அழைத்துச்செல்வார். அப்போது எனக்குச் சின்ன வயது என்பதால் அங்குப் பேசும் பல விஷயங்கள் புரியாது. ஆனால், ஏதோவோர் உணர்வை அது விதைத்தது. அப்படிச் செல்லும்கூட்டங்கள் வழியேதான் தாய்மொழியில் கல்வி கற்பதே சிறந்தது என்ற புரிதல் கிடைத்தது. அதனால், எந்தத் தயக்கமுமின்றி படித்து, பல் மருத்துவராகியுள்ளேன். அதற்கு எப்போதும் நன்றி சொல்ல வேண்டியது அப்பாவுக்குத்தான்" எனக்கூறியிருந்தார்.

கும்பகோணம் அருகே இருக்கும் நாச்சியார் கோயிலில் தாய்த்தமிழ்ப் பள்ளியை நடத்திய சோலை மாரியப்பன் கூறுகையில், ``தமிழ்க்குரிசில் நடத்திவந்த மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு எங்கிருந்தாவது ஓர் உதவி கிடைத்தாலோ, ஏதேனும் ஒரு புதிய பயிற்சி கிடைத்தாலோ, அவற்றைத் தன் பள்ளிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்ததே இல்லை. உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு அவற்றைக் கொண்டு சேர்ப்பார். இந்தப் பண்பை எல்லோரிடமும் பார்க்க முடியாது. நடமாடும் அலுவலகமாக அவர் இருந்தார் என்று சொல்லலாம். பேப்பர், பேனா, பென்சில் பள்ளியின் ரப்பர் ஸ்டாம்ப் உட்பட அனைத்தையும் அவரது பையில் வைத்திருப்பார். திடீரென ஒருவர் மூலம் ஏதேனும் உதவியோ, காரியமோ நடக்கும் சூழல் அமைந்தால், அது ஒரு நொடியும் தாமதமாகிவிடக் கூடாது என உடனடியாகச் செயலில் இறங்கத் தயாராக இருப்பார். இந்தப் பழக்கம் பல விஷயங்களில் அவருக்கு உதவியுள்ளது. தமிழ்க் குரிசிலின் மரணம், தமிழ் மொழியை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்ப்பதை, கடமையாக நினைத்து இயங்குபவர்களுக்குப் பெரிய இழப்பு" என்றார்.  

கொளத்தூர் மணி

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, "தாய்த்தமிழ்ப் பள்ளியில் தமிழ்க்குரிசினின் பணி அளவிட முடியாதது. பள்ளியைக் கட்டணமின்றி நடத்துவதற்கான முழுப் பொறுப்பையும் அவரே ஏற்றார். அதேபோல, பெரியாரை மிக ஆழமாக வாசித்த பெரியாரியவாதி. குடியரசு இதழ்களைத் தொகுக்கும் பணியாகட்டும் சரி, பசு. கவுதமன் தொகுத்த பெரியார் தொகுப்புகளாகட்டும் அவற்றைச் செப்பனிட்டதில் தமிழ்க்குரிசிலின் பங்களிப்பு மிக அதிகம். பெரியாரிய கருத்துகள், தாய்மொழிக் கல்வியின் அவசியம் ஆகியவற்றை மக்களிடையே பரப்புவதில் கொஞ்சமும் தளரமாட்டார். வாட்ஸ் அப் போன்ற புதிய தொழில்நுட்பங்களிலும் அக்கருத்துகளோடு விவாதிக்கச் செய்வார். அவருக்கு இதயம் தொடர்பான சிக்கல் இருந்தது எனக்கு இன்றுதான் தெரியும். நேற்றிரவு அவரே மருத்துவரைச் சந்திக்கச் சென்றவர், விடியற்காலையில் இறந்துவிட்டார். அவர் இழப்பு பெரியாரியவாதிகளுக்கும் தமிழ் வழிக் கல்வியை விரும்புபவர்களுக்கும் தாங்க முடியாத வேதனையைத் தருகிறது" என்றார். 

மேட்டூர் தாய்த்தமிழ்த் தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துவருகின்றனர். 4ம் வகுப்பு ஆசிரியை தங்கமணி, "மாணவர்களை அடிக்கக் கூடாது, திட்டக் கூடாது என்பது எங்கள் பள்ளியின் முதல் விதி. அதைத்தான் அய்யாவும் விரும்புவார். வருடந்தோறும் சுற்றுலா செல்லும்போது உடன்வந்து உற்சாகப்படுத்துவார். அவர் இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று கலங்குகிறார்.

தமிழ்ப் பள்ளி

இறக்கும் நாள் வரை, சுறுசுறுப்பாகப் பணியாற்றியவர் தமிழ்க்குரிசில். தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரை சென்ற மாதம் தமது குழுவினருடன் சந்தித்தவர், தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் கோரிக்கைகளை முன்வைத்தார். அந்தச் செய்தியை வாட்ஸ் அப் மூலம் பலருக்கும் கொண்டுசேர்த்திருந்தார். அவர் பணியைத் தொடர்ந்து எடுத்துச்செல்வதுதான் அவரது சேவைக்கான கைம்மாறாக இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்