மாரடைப்பால் உயிரிழந்த நெல்லை சுந்தரி யானை... கதறித் துடித்த யானைப் பாகன்! | sundari elephant died in nellai veterinary hospital today

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (03/09/2018)

கடைசி தொடர்பு:19:50 (03/09/2018)

மாரடைப்பால் உயிரிழந்த நெல்லை சுந்தரி யானை... கதறித் துடித்த யானைப் பாகன்!

முதுமையின் காரணமாகப் பல்வேறு நோய்களால் சிக்கித் தவித்த சுந்தரி யானை, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் கீழே விழுந்து உயிரிழந்தது. அதைப் பார்த்த யானைப் பாகன் வேதனையுடன் கதறித் துடித்தார்.

சுந்தரி யானை

தென்காசியைச் சேர்ந்த பீர்முகமது என்பவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சுந்தரி யானையை வாங்கி வந்தார். இந்த யானையின் பாகனாகப் பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அசன் மைதீன் பணியாற்றி வந்தார். அவரின் உதவியாளராக ராஜேஸ்வரன் என்பவர் செயலாற்றினார். நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில் விழாக்கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்களின் இல்லத் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எனப் பல முக்கிய நிகழ்வுகளில் சுந்தரி யானை பங்கேற்றுள்ளது.

தற்போது 85 வயதான இந்த யானையின் இரு கண்பார்வையும் பறிபோய்விட்டது. முதுமை காரணமாகப் பற்கள் அனைத்தும் விழுந்து விட்டன. நாக்கிலும் கால்களிலும் புண்கள், தோலில் வெடிப்புகள் எனப் பல நோய்களுக்கு உள்ளாகி இருந்தது. கால் நகங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்பட்டது. கால்களில் அரிப்பு ஏற்பட்டதால் அடிக்கடி கால்களை தேய்த்துக் கொண்டதால் ரத்தம் சிந்தியது. சுந்தரி யானைக்கு நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கடந்த 28 நாள்களாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

யானையின் உடல்நிலை ஓரளவுக்கு தேறியதும் அதை முதுமலை சரணாலயம் அல்லது தனியார் அமைப்புகளின் உதவியுடன் மேல் சிகிச்சை அளிக்க வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோதே திடீரென நிலைகுலைந்து சரிந்துள்ளது. உடனடியாக அதற்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு நாடித்துடிப்பை சோதனையிட்டபோது இதயத்துடிப்பு குறைந்து உயிரிழந்துவிட்டது.

இதுபற்றி கால்நடை மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் பாபு கூறுகையில், ‘’இந்த யானைக்கு பற்கள் இல்லாததால் பிற யானைகளைப் போல அதற்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் சாப்பாடு, கேள்வரகு, கம்பு கஞ்சியையும் பழங்கள், அவல் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு வந்தது. முதுமையின் காரணமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்த யானைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்து விட்டது’’ என்றார்.

உயிரிழந்த யானை

யானை உயிரிழந்ததை அறிந்ததும் யானைப் பாகன் அசன் மைதீன், உதவியாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் கதறித் துடித்தனர். பாகன் அசன் மைதீன், ‘’யானைக்கு உடல்நலம் சரியாகி மீண்டும் ஊருக்குப் போயிடலாம்னு நம்பியிருந்தேன். அது போலவே யானை நாளுக்கு நாள் தெம்பாகிக் கொண்டே வந்தது. கண்ணில் அறுவை சிகிச்சை செய்து பார்வையை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப் போவதாக மருத்துவர்கள் பேசினாங்க. 

இந்த யானை என்னிடம் ரொம்ப பாசமா இருக்கும். நான் சாப்பாடு குடுத்தால் மட்டுமே சாப்பிடும். வேறு யாரிடமும் எதையும் வாங்காது. அதனாலேயே நான் வெளியூருக்கு எங்கேயும் போக மாட்டேன். ராத்திரியில் கூட பசிச்சா கூப்பிடும். அல்லது அருகில் படுத்துக் கிடக்கும் என்னை எழுப்பும். என்னோட தாய் மாதிரி நான் அதனைப் பாதுகாத்தேன். என்னிடம் பணம் இல்லாத நிலையில் 20,000 ரூபாய் வட்டிக்கு வாங்கிட்டு வந்து யானைக்கு சிகிச்சையையும் செலவுகளையும் செஞ்சேன். சீக்கிரமே குணமாகிவிடும்னு நம்பிக்கிட்டிருந்தபோது இப்படி ஆகிவிட்டது. எனக்கு எல்லாமே வெறுமையாகி விட்டது மாதிரி இருக்கு. சுந்தரி யானையின் நினைவு காலமெல்லாம் என்னோடு இருக்கும்’’ என்றார் கதறி அழுதபடியே.

யானை மறைந்த தகவல் கிடைத்ததும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மக்கள் திரண்டு வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். யானைக்கு இறுதிச் சடங்குகளை செய்வது தொடர்பாக வனத்துறையே முடிவெடுக்க உள்ளது. 4-ம் தேதி காலை யானையை அடக்கம் செய்யும் பணிகள் நடக்கும் என கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.