வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (03/09/2018)

கடைசி தொடர்பு:23:00 (03/09/2018)

``காய்ந்துபோன கிணற்றில் தண்ணீர்” - 58 கிராம பாசனக் கால்வாய் விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர், உசிலம்பட்டி பகுதி 58 கிராமங்களைச் சென்றடையும் விதமாக உருவாக்கப்பட்டது 58 கிராம பாசனக் கால்வாய். வைகை அணை தனது முழுக்கொள்ளவை எட்டும்போது, அணையின் வலதுபுறக் கரையில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாயின் மதகு திறக்கப்படும். பத்து வருடங்களுக்கும் மேலாக நீடித்த கட்டுமானப்பணிகள் முடிந்து, கடந்த 22 -ம் தேதி, சோதனை ஓட்டமாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கால்வாயில் எங்கெங்கு தண்ணீர்க் கசிவு ஏற்படுகிறது என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுசெய்துவருகிறார்கள்.

கால்வாய்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், "கால்வாயில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. எங்கெங்கு தண்ணீர் கசிவு ஏற்பட்டிருக்கிறது என ஆய்வுசெய்துவருகிறோம். முன்னர், கால்வாயின் கரை உடைந்தது. அதைச் சரிசெய்தோம். நேற்று, ஆண்டிபட்டி அருகே உள்ள கொட்டோடைப் பட்டியில் அமைந்துள்ள தொட்டிப் பாலத்தில் கசிவு ஏற்பட்டது. ஒவ்வொரு 30 மீட்டருக்கும் ஒரு இணைப்பு இருக்கும். அந்த இணைப்பில்தான், தண்ணீர்க் கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று கசிவை உடனடியாகச் சரிசெய்துவிட்டோம். நாளை, உசிலம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் சென்றுவிடும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

பாசன கால்வாய் திட்டம்

"மூன்று மாவட்டம், 110 கிராமங்கள், 33 கண்மாய்கள், 5 லட்சம் மக்கள் இந்த 58 கிராம பாசனக்கால்வாயை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். கால்வாயில் வரும் தண்ணீரோடு நாங்களும் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். தண்ணீர் வேகமில்லாமல் வந்துகொண்டிருக்கிறது. நாளை உசிலம்பட்டி கண்மாயை வந்தடையும் என எதிர்பார்க்கிறோம். காய்ந்துபோன பூமிக்குள் தண்ணீர் வருவதைக் காணும்போது மனம் குளிர்கிறது. காய்ந்துபோன கிணற்றில் தண்ணீர் ஊறுகிறது. கைவிடப்பட்ட போர்வெல்லில் தண்ணீர் வருகிறது. ஆண்டிபட்டி அருகே ஒருவர் கால்வாய்த் தண்ணீரில் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் பார்க்கும்போது, ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார், 58 கிராம கால்வாய் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன்.

கால்வாயில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. இது, சோதனை ஓட்டம் மட்டுமே. இதனால், கால்வாயில் எந்தெந்தப் பகுதியில் பாதிப்பு உள்ளது என்று கண்டறிந்து சரிசெய்ய உதவும். அதைத்தான் தற்போது செய்துகொண்டிருக்கிறோம் என்கிறார்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள்.