`நீதிமன்ற தீர்ப்பைக்கூட போராட்டம் நடத்தியே அமல்படுத்த வேண்டியுள்ளது' - நீதியரசர் சந்துரு வேதனை!

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு நேற்று துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய 2-ம் நாள் நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நீதியரசர் சந்துரு

விழாவில் பேசிய அவர், ``மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் ஏறுவதற்கு ஏதுவாக அனைத்துப் பெட்டிகளிலும் சாய்வுதளம் மற்றும் தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்போவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் ஏற்கெனவே உறுதியளித்தது. ஆனால், இன்றுவரை அவை அமல்படுத்தப்படவில்லை. அதேபோன்று பேருந்தில் மின்தூக்கி வைப்பதற்கும் நீதிமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அப்போதைய ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் அத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள். குறிப்பாக போக்குவரத்துத் துறை மற்றும் மின்சார துறைகளில் பணியின்போது விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளியான நபர்களை உடனே வேலையை விட்டு நீக்கிவிடும் சூழல் நிலவுகிறது. அதற்கு மாறாக அவர்கள் ஓய்வுபெறும் வரை சம்பந்தப்பட்ட துறையில் வெவ்வேறு பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.

நம் நாட்டில் ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை அமல்படுத்தவே நீதிமன்றப் படிகள் ஏற வேண்டியிருக்கிறது. பின்னர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த பல போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கிறது. அவற்றை ஒருங்கிணைக்க இயக்கங்களும் தேவைப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. ஆனால், அந்த நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகளும் போராட வேண்டியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் யாசகம் கேட்கவில்லை. யாரிடமும் பரிதாபத்தையும் எதிர்ப்பார்க்கவில்லை. மாறாக சம உரிமை மற்றும் சம வாய்ப்புகளை மட்டும்தான் கேட்கிறார்கள். அதை மறுக்காதீர்கள்" என்றார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து, மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்பட்ட நபர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!