அரசு உத்தரவை மதிக்காமல் மெத்தனம் - மகனைப் பள்ளியில் சேர்க்க முடியாமல் அவதிப்படும் பெற்றோர்! | Parents who are unable to get their son in school for Private school not responding the government order

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (04/09/2018)

கடைசி தொடர்பு:07:36 (04/09/2018)

அரசு உத்தரவை மதிக்காமல் மெத்தனம் - மகனைப் பள்ளியில் சேர்க்க முடியாமல் அவதிப்படும் பெற்றோர்!

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள மகாத்மா மெட்ரிக் பள்ளியில் அரசு விதிமுறைகளின்படி தனது மகனைச் சேர்க்க உத்தரவிடுமாறு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அம்மாணவரின் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்.

மாணிக்கம்

இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த மாணிக்கம் நம்மிடம் பேசும்போது.., ``எனது மகன் கிஷோர்குமார் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை பயின்று வந்தார். இந்நிலையில், 2018 - 2019-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களை நற்பெயர் பெற்ற உண்டு உறைவிட தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்கும் விதமாக நடைபெற்ற போட்டியில் என் மகன் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய லதா, என் மகன் கிஷோர்குமாரை மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள தனியார் (மகாத்மா) மெட்ரிக் மேலைநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்ந்துகொள்ளுமாறு பரிந்துரை செய்தார்.

இதையொட்டி, நானும், எனது மகனும் அந்தப் பள்ளிக்குச் சென்று முறையிட்டோம். ஆனால், பள்ளி நிர்வாகம் எங்களைக் கேட்டுக்கு வெளியில் நிறுத்தித் திருப்பி அனுப்பி விட்டார்கள். நான் மன்றாடிப் பேசியும் என்னை ஒரு பொருட்டாக அவர்கள் மதிக்கவில்லை. தங்களது மகனை இப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தனர். இதன்காரணமாக, எனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.  

ஆகவே இதைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டபடி மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் எனது மகன் சேர்ந்து படிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். ஏழைகளின் பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கக் கூடாதா. இல்லை அந்தப் பள்ளியில் படிக்க நினைத்தது என் மகனின் தவறா என்று தெரியவில்லை. அரசாணையைக் கூட மதிக்காத ஒரு பள்ளியாக அந்தப் பள்ளி இருக்கிறது" என்று ஆதங்கப்படுகிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க