மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூபாய் 1.5 கோடி செலவில் புதிதாக சி.டி.ஸ்கேன் கருவி!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ரூபாய் 1.5 கோடி செலவில் புதிதாக சி.டி.ஸ்கேன் கருவி பொதுமக்கள் நலனுக்காக நிறுவப்பட்டுள்ளது. இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.

சி டி ஸ்கேன்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை 1880-ம் ஆண்டு முதல் செயலாற்றி வருகிறது. ஏறத்தாழ 138 ஆண்டுகள் சிறப்பாக செயலாற்றி வரும் மிக பழமையான மருத்துவமனை. இந்த அரசு பெரியார் மருத்துவமனை நாகப்பட்டினம் மாவட்டத்திலே இரண்டாவது பெரிய மருத்துவமனையாக 346 படுக்கை வசதிகளுடன் திகழ்ந்து வருகிறது. மயிலாடுதுறை சுற்றியுள்ள 15 கி.மீ. சுற்றளவில் உள்ள பொதுமக்கள் பயன் பெரும் வகையில் அமைந்திருக்கும் இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 2000க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 300 கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வருடத்திற்கு 4000-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று தமிழ்நாட்டில் மகப்பேறு நடைபெறுவதில் 5-வது இடத்தை பெற்றுள்ளது இந்த மருத்துவமனை.

புறநோயாளி பிரிவு, தீப்புண் பிரிவு, ஆண்கள் மருத்துவம், ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, தீவிர இதய சிகிச்சை பிரிவு, பேறுகால கவனிப்பு மையம், மகப்பேறு வளாகம், பிணக்கூராய்வு மையம், கண் அறுவை சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, எலும்பு முறிவு பிரிவு, குழந்தைகள் நலப் பகுதி, சித்தா பிரிவு, 60 படுக்கைகள் கொண்ட அறுவை அரங்கம், மலேரியா மற்றும் யானைக்கால் சிகிச்சை பிரிவு போன்றவைகளோடு செயல்பட்டு வருகிறது அரசு பெரியார் மருத்துவமனை. இதற்கிடையே, இந்த  மருத்துவமனையை தற்போது சி.டி.ஸ்கேன் வசதி பொருத்தப்பட்டுள்ளது. 

இதனை திறந்து வைத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும்போது, ``மயிலாடுதுறை பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவர்களை இதுநாள் வரை அருகில் உள்ள திருவாரூர் மருத்துவ கல்லூரி மற்றும் நாகப்பட்டினம் தலைமை மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெற வேண்டும். அவ்வாறு செல்லும் போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மேலும் அதிக அளவில் பொருள் விரயம், போக்குவரத்து போன்ற பிரச்னைகளை பொதுமக்கள் சந்தித்து வந்தனர். அப்படி தவித்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் இது குறித்து அறிவிக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!