`ஸ்டாலின் அந்த ட்வீட் போட்டிருக்கக்கூடாது' - ஷோபியா விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கும் தமிழிசை!

விமானத்தில் இளம்பெண் கோஷமிட்டதை தமிழக அரசியல் தலைவர்கள் ஆதரிப்பது ஆச்சர்யமாக உள்ளது என பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் அவருடன் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் பி.ஹெச்டி படிக்கும் ஆராய்ச்சி மாணவியான ஷோபியா விமானத்தில் வைத்தே `பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக' என்று கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினார். மேலும், தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடனும் மீண்டும் தமிழிசையைப் பார்த்து கோஷம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையினரின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. இதுகுறித்து கருத்து பதிவிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன்! `பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக!" என்று கூறியிருந்தார்.

தமிழிசை  

மு.க.ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``உண்மையிலேயே இது தவறான அரசியல். சக அரசியல்வாதிக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டதை ஆதரிப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதே நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டால் நான் முதல் ஆளாக எதிர்த்திருப்பேன். ஸ்டாலின் அந்த ட்வீட் போட்டிருக்கக்கூடாது" எனக் கூறினார். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அவர், ``ஜனநாயக உரிமை என்று கூறிக்கொண்டு விமானத்தின் உள்ளே அந்தப் பெண் ஒழுக்கமில்லாமல் நடந்துகொண்டதைத் தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரிப்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அவர்களும் விமானத்தில் செல்லும்போது இதேபோன்ற சம்பவம் நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா அல்லது அவர்களது தொண்டர்கள் தான் ஜனநாயக உரிமை என அமைதியாக இருப்பார்களா?" எனப் பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!