`காவிரி கடலில் கலந்ததே தவிர எங்கள் கண்ணீரைத் துடைக்கவில்லை!' - விவசாயிகள் வேதனை

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து தஞ்சாவூர் கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதிக்கு வந்து பார்வையிட்டு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தப்பட்டது.

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 50 நாள்கள் ஆன நிலையில் இதுவரை கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. மாறாக அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருந்ததால் அவை கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு வீணாக கடலில் கலந்தது. ``தமிழக அரசு ஆறு, குளங்களை தூர்வாரி முறையாக நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம்'' என விவசாயிகளும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரின் கடைமடைப் பகுதியான பட்டுகோட்டை, பேராவூரணி பகுதிகளுக்கும் தண்ணீர் வராமல் வறண்டு கிடப்பதுதான் வேதனையின் உச்சம். இதை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பார்வையிட்டதோடு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில், பட்டுகோட்டை, பேராவூரணியில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து அனைத்துக்கட்சிகள், வர்த்தக சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருவதோடு சாலை மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இது குறித்து விவசாயி வீரசேனனிடம் பேசினோம். ``கடந்த பல வருடங்களாக காவிரியில் தண்ணீர் இல்லாமல் டெல்டாவே வறண்டு வறட்சியின் பிடியில் சிக்கி தவித்தது. இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 50 நாள்கள் ஆகப் போகிறது. ஆனால் கடைமடைப் பகுதியான பட்டுகோட்டைக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதற்காக பல போராட்டங்களை நடத்தியும் அரசின் காதில் விழவில்லை. அரசு தூர்வாருவது உள்ளிட்ட எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் இயற்கை அள்ளித்தந்த தண்ணீர் வீணாகக் கடலில் கலந்ததே தவிரே எங்கள் கண்ணீரை துடைக்கவில்லை. உடனடியாக முதல்வர் இந்தப் பகுதிக்கு வந்து பார்வையிட்டு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பேராவூரணி வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஜகுபர் அலியிடம் பேசினோம். ``விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை முதலே ஒரு கடையும் திறக்கவில்லை. ஆளும் அரசுகளான அ.தி.மு.க, பி.ஜே.பி கட்சிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். பூக்களைப் போல் விவசாயிகளின் வாழ்கை இன்று தண்ணீர் இல்லாமல் தினம் தினம் கருகி வருகிறது. விவசாயிகள் படும் துயரம் ஆளும் அரசுக்குத் தெரியவில்லை. போதுமான முன்னேற்பாடுகள் இல்லாததால் கரைபுரண்டு வந்த தண்ணீர் கடலில் கலந்த அவலம் இங்கு நடந்துள்ளது. உடனடியாக தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே கடையடைப்பு போராட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடத்தி வருகிறோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!