வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (04/09/2018)

கடைசி தொடர்பு:12:00 (04/09/2018)

எட்டு வழிச்சாலைக்காக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தத் தேவையில்லை - உயர் நீதிமன்றம்

சேலம் எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களிடம் கருத்துகளையோ அல்லது மறு குடியேற்றத்தையோ கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்புகளைத் தெரிவித்தும் வருகின்றனர். எட்டு வழிச்சாலைக்காக உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அதில் பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், 'நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டம் 2013-ன் சட்டப்பிரிவு 105 மற்றும் தற்போது நடைபெற்று வரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைச் சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், `2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தின் 105 சட்டப்பிரிவு செல்லும் என தீர்ப்பளித்தனர். 105 சட்டப்பிரிவின்படி, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது, அவர்களது மீள் குடியேற்றம், மறுவாழ்வு, நியாயமான இழப்பீடு போன்றவற்றை அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை'' என்று தீர்ப்பளித்தனர்.