1 லட்சம் பேர்; போலீஸ் சிக்னல்; நீக்கப்பட்ட நிர்வாகி! - ஸ்டாலின் முடிவால் கடுகடுத்த அழகிரி | DMK's decision irritates Azhagiri to the core

வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (04/09/2018)

கடைசி தொடர்பு:15:14 (04/09/2018)

1 லட்சம் பேர்; போலீஸ் சிக்னல்; நீக்கப்பட்ட நிர்வாகி! - ஸ்டாலின் முடிவால் கடுகடுத்த அழகிரி

இந்தக் கட்சி நம்முடையது. தலைவருக்காகத்தான் அனைத்தையும் செய்கிறோம். இதை உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?' எனக் கேள்வி எழுப்பினார் அழகிரி.

1 லட்சம் பேர்; போலீஸ் சிக்னல்; நீக்கப்பட்ட நிர்வாகி! - ஸ்டாலின் முடிவால் கடுகடுத்த அழகிரி

மு.க.அழகிரியை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசிய வேளச்சேரி பகுதிக் கழக தி.மு.க நிர்வாகி, கட்சியை விட்டு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ' இந்தக் கட்சியைக் காப்பாற்றத்தான் நான் உழைக்கிறேன். என்னை வந்து பார்த்ததுக்கே நடவடிக்கை எடுக்கிறார்களா?' என ஆதரவாளர்களிடம் கொந்தளித்திருக்கிறார் அழகிரி. 

சென்னை அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி சமாதி வரையில், நாளை அமைதிப் பேரணியை நடத்த இருக்கிறார் மு.க.அழகிரி. இந்தப் பேரணியில் ஒரு லட்சம் பேர் வரையில் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்காக போலீஸ் அனுமதியையும் வாங்கிவிட்டனர். இந்த நிலையில், அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேளச்சேரி பகுதிக் கழக தி.மு.க நிர்வாகி ரவியைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறார் பொதுச் செயலாளர் அன்பழகன். இது அழகிரி தரப்பினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. 

மு.க.ஸ்டாலின்அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். `` மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்பதற்காக மிகவும் கீழே இறங்கிப் போய் பேட்டி அளித்தார் அழகிரி. ` கட்சியில் சேர்த்தால் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்' என்றார். இருப்பினும், ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இன்று வேளச்சேரி பகுதிக் கழக நிர்வாகி ஒருவர் நீக்கப்பட்ட தகவலைக் கேட்டு இன்னும் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார். அவர் எங்களிடம் பேசும்போது, ` நம்மை வந்து ஒரு நிர்வாகி பார்த்ததுக்கே கட்சியை விட்டு நீக்குகிறார். இவர் (ஸ்டாலின்) எப்படி நம்மைக் கட்சியில் சேர்க்க நினைப்பார். அவர் மாறப் போவதில்லை. இந்தத் தொண்டர்களைக் காப்பாற்றத்தான் நான் இருக்கிறேன். நாளை பேரணி முடிந்ததும் மற்ற விஷயங்களை முடிவு செய்கிறேன். இந்தக் கட்சி நம்முடையது. தலைவருக்காகத்தான் அனைத்தையும் செய்கிறோம். இதை உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?' எனக் கேள்வி எழுப்பினார். அவரை நாங்கள் சமாதானப்படுத்தினோம். 

இதன்பிறகு, தனியார் ஓட்டலில் தங்கியிருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார் அழகிரி. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது 50 வாகனங்கள் வர இருக்கின்றன. கோவையில் இருந்து மட்டும் 100 வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு வருகின்றனர். மதுரையில் இருந்து 500 வாகனங்கள் கிளம்புகின்றன. இதற்கான செலவுகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நபர்களே செய்கின்றனர். கல்யாண மண்டபம், தனியார் ஓட்டல்கள் என அனைத்தையும் முன்னரே புக்கிங் செய்துவிட்டோம். காவல்துறையிலும் எந்த எதிர்ப்பும் இல்லை. ' நாளை எந்த நிகழ்ச்சிகளும் இல்லாததால், பேரணியை நடத்துவதில் சிரமம் இல்லை' என அவர்கள் கூறிவிட்டனர். இந்தப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உறுதியாகக் கலந்துகொள்வார்கள். நாளை பத்து மணிக்குத் தொடங்கும் பேரணி 12 மணிக்கு நிறைவடையும். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க இருக்கிறார் அழகிரி" என்றார் விரிவாக. 

`` அழகிரி நடத்தப் போகும் பேரணியை தி.மு.க நிர்வாகிகள் சிலரும் குடும்ப உறுப்பினர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். பேரணிக்குக் கிடைக்கப் போகும் வரவேற்பைப் பொறுத்து, அவர்களில் சிலர் மனமாற்றம் அடையவும் வாய்ப்பிருக்கிறது" என விவரித்த முக்கிய நிர்வாகி ஒருவர், ``அழகிரியோடு எந்தவிதத் தொடர்பையும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் ஸ்டாலின். இதில் கட்சிப் பதவி கேட்டு ஏமாற்றம் அடைந்த நிர்வாகிகளும் குடும்ப ஆள்களும் அழகிரியின் ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதன்மூலம், ஸ்டாலினிடம் பதவி வாங்கிவிட முடியும் எனவும் நம்புகின்றனர். `பேரணி முடியட்டும். அதன்பிறகு முடிவெடுப்போம்' என அவர்கள் விவாதம் நடத்தியுள்ளனர். பேரணி குறித்த விவரங்களையும் அறிவாலய நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர்" என்றார் நிதானமாக. 


[X] Close

[X] Close