ஷோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

விமானத்தில் தமிழிசை முன்பு பா.ஜ.க.வை எதிர்த்து கோஷமிட்டு கைதான ஷோபியா என்ற பெண்ணுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஷோபியா

பா.ஜ.க.வில் 1,000 பேர் இணையும் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இந்த விமானத்தில் கனடாவில் பி.ஹெச்டி. ஆராய்ச்சி  செய்து வரும் தூத்துக்குடி கந்தன்காலனியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற பெண் ஒருவரும் பயணித்து வந்துள்ளார்.

விமானத்தில் தமிழிசையைப் பார்த்து ஷோபியா , ``பாசிச பா.ஜ.க. ஒழிக., மோடி ஒழிக” எனக் கைகளை உயர்த்திக் கோஷம் எழுப்பினாராம்.
இந்த நிலையில், விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் ஷோபியா, தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும், அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளரிடம் தமிழிசை புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஷோபியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், 505(1)(B), 290 மற்றும் 75 (M.C.P) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் ஷோபியா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். இதையடுத்து, நெல்லை மாவட்டம், கொக்கிரக்குளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட இருந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ``தனக்கு உடல் நிலை சரியில்லை" எனக் கோரியதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில், சோபியாவின் தந்தை சாமி, ஜாமீன் கோரி இன்று காலை ஜே.எம்-3 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, ஷோபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!