வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (04/09/2018)

கடைசி தொடர்பு:13:38 (04/09/2018)

அழகிரியை வரவேற்ற தி.மு.க நிர்வாகி சஸ்பெண்டு

அழகிரியை வரவேற்ற தி.மு.க நிர்வாகி சஸ்பெண்டு

சென்னையில் மு.க.அழகிரியை வரவேற்ற தி.மு.க நிர்வாகி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மு.க.அழகிரி

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதையடுத்து கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார். தி.மு.கவில் இருந்து விலகிய பல மூத்த நிர்வாகிகள் தற்போது கட்சியில் இணைந்து வருகின்றனர். மு.க.அழகிரியும் தன்னை தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் மூலம் தூது விட்டவர் பொதுவெளியில் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்கிறேன் எனப் பேசினார். ஆனால், ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இதில் கடுப்பான அழகிரி,  ‘நான் தலைவரின் மகன் சொன்னதைச் செய்வேன். கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்.’ என கூறி வருகிறார். சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நாளை அமைதிப் பேரணிக்கு மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரியை வரவேற்ற தி.மு.க நிர்வாகி ரவி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை கட்சியின் நிர்வாகி வரவேற்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் ரவியை தற்காலிகமாக நீக்கம் செய்வதாக தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அழகிரியிடம் நெருக்கம் காட்டும் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலே இந்த நீக்கம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.