` சிரித்த முகத்துடன்தான் என்னை வழியனுப்பினாள்!' - கதறும் அபிராமியின் கணவர் விஜய் | abirami husband speaks about the last minutes of his children

வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (04/09/2018)

கடைசி தொடர்பு:16:49 (05/09/2018)

` சிரித்த முகத்துடன்தான் என்னை வழியனுப்பினாள்!' - கதறும் அபிராமியின் கணவர் விஜய்

' மகளைக் கொன்றதைக்கூட முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடனே என்னை வழியனுப்பி வைத்தாள் அபிராமி' எனக் கண்ணீர்மல்க தெரிவித்திருக்கிறார் கணவர் விஜய். 

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில் உள்ள மூன்றாம் கட்டளையில் குடியிருப்பவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்தக் குழந்தைகளைத்தான் அபிராமி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியபோது, அவரைப் போலீஸார் கைதுசெய்தனர். இந்த விவகாரத்தில் அபிராமியின் நண்பர் சுந்தரத்தையும் போலீஸார் வளைத்துள்ளனர். 

அபிராமி கணவர் விஜய்யிடம் பேசினோம். `` என்னுடைய சொந்த ஊர் கடலூர். நான், கேட்டரிங் படிப்பதற்காக சென்னை வந்தேன். அப்போது என்னுடன் படித்தவர்தான் அபிராமி. எல்லோரிடமும் அவர் சகஜமாகப் பேசுவார். நாங்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். அபிராமி வீட்டினரே எங்களின் திருமணத்தை நடத்திவைத்தனர். என்னுடைய மகன் அஜய்க்கு மூன்று மாதம் இருக்கும்போது, இப்போது குடியிருக்கும் வீட்டுக்கு வாடகைக்கு வந்தோம். வீட்டின் உரிமையாளர் சுமதிக்கு, அஜய்யை ரொம்பப் பிடிக்கும். எப்போதும் அவர்கள் வீட்டில்தான் அவன் இருப்பான். ஏழு ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்துவருகிறோம். இந்தச் சமயத்தில்தான், இரண்டாவதாக கார்னிகா பிறந்தார்.

அபிராமி மற்றும் விஜய் குழந்தைகளுடன்

அபிராமியின் பெற்றோர் வீடு அருகிலேயே இருப்பதால் அவர்கள் எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டனர். கேட்டரிங் வேலையைவிட வங்கி வேலையில் நல்ல சம்பளம் கிடைத்தது. இதனால் வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்தது" என சோகத்துடன் விவரித்தவர், `` கடந்த 31-ம் தேதி எனக்குப் பிறந்தநாள். அதையொட்டி மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றேன். அன்று இரவு எனக்கும் குழந்தைகளுக்கும் குடிப்பதற்குப் பால் கொடுத்தார் அபிராமி. அதைச் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டோம். காலையில் எங்களுக்கு முன் எழுந்து அபிராமி டிபன் செய்துகொண்டிருந்தார். நானும் அஜய்யும் எழுந்தோம். ஆனால், கார்னிகா மட்டும் கண்விழிக்கவில்லை. 

நான் டிபன் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் புறப்பட்டேன். அப்போது வாசல் வரை வந்து சிரித்தபடியே அபிராமி டாடா காட்டினார். அஜய், என்னுடன் கீழே இறங்கிவந்து ஹெல்மேட்டைக் கொடுத்தான். அதன்பிறகு நான் கிளம்பிவிட்டேன். வீட்டுக்கு வந்தப்பிறகுதான், கார்னிகா, அஜய் இறந்து கிடந்தது தெரியவந்தது. அபிராமியைத் தேடினேன். அவரின் செல்போன் நம்பரில் தொடர்புகொண்டேன். வீட்டில் அவரது ஸ்கூட்டரும் இல்லை. உடனடியாக அபிராமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தேன். என்னுடைய கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். அப்போதுகூட அபிராமிதான் குழந்தைகளைக் கொலை செய்திருப்பாள் என்ற சந்தேகம் எனக்கு வரவில்லை. போலீஸார் விசாரித்தபிறகுதான், அபிராமிதான் குழந்தைகளைக் கொலை செய்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நான் காதலித்த அபிராமியா இதைச் செய்தார் என்பதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. வழக்கமாக வேலைக்குச் செல்லும்போது கார்னிகாவுக்கு முத்தம் கொடுப்பேன். ஆனால், அவள் இறந்ததுகூட தெரியாமல் முத்தம் கொடுக்கச் சென்றேன். அதை அபிராமி தடுத்துவிட்டார். நான் முத்தம் கொடுத்திருந்தால் உண்மையைக் கண்டுப்பிடித்திருப்பேன். அஜய்யையும் காப்பாற்றியிருப்பேன்" என்றார் கண்ணீருடன். 


[X] Close

[X] Close