`தூர்வாரப்பட்ட ஏரிகளின் விவரங்களை வெளியிடுங்கள்'- முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை

முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் ஏரிகள் தூர்வாரப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த தகவல் பெரும் சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான புள்ளி விவரங்களை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

பழ. ராஜேந்திரன்இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், ``தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ம் தேதி தனது சொந்த ஊரான எடப்பாடியில் புதிய அரசுக் கட்டடங்களை திறந்து வைத்துப் பேசியபோது, ‘தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய் செலவில் 1519 ஏரிகள் தூரவாரப்பட்டதாகவும் இந்த ஆண்டு 328 கோடி ரூபாய் செலவில் 1511 ஏரிகளில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாகவும்’ தெரிவித்துள்ளார். அவர் சொன்ன தகவல் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. கடந்த ஆண்டு குறைவான செலவில் அதிக ஏரிகள் தூரவாரப்பட்டது என முதல்வரே தனது பேச்சில் குறிப்பிடுகிறார்.

ஆனால், இந்த ஆண்டு மூன்று மடங்கு மேல் கூடுதலாக செலவு செய்தும்கூட கடந்த ஆண்டைவிட மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் தூர் வாரப்படுகிறது. 100 கோடியில் 1519 ஏரிகள் தூரவார முடியும் என்றால், 328 கோடியில் 4500 ஏரிகளுக்கு மேல் தூர்வார முடியும். இதில் ஏதோ முறைகேடு நடைபெற்றுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். மக்கள் இது குறித்த உண்மை நிலையை அறிந்துகொள்ள, தூர்வாரப்பட்ட ஏரிகளின் புள்ளி விவரங்களை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!