சுந்தரி யானைக்கு இறுதி அஞ்சலி! - சோகத்துடன் திரண்ட நெல்லை மக்கள்

நெல்லையில் உயிரிழந்த சுந்தரி யானை, ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வனத்துறையினரின் உதவியுடன் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று யானைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்

நெல்லையில் உயிரிழந்த சுந்தரி யானை, ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. வனத்துறையினரின் உதவியுடன் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று யானைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 

சுந்தரி யானை

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அசன் மைதீன். இவர் சுந்தரி என்ற பெண் யானையின் பாகனாகச் செயல்பட்டு வந்தார். கோயில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்ற சுந்தரி யானைக்கு 85 வயதாகிவிட்டதாலும் முதுமையின் காரணமாகவும் நோய்வாய்ப்பட்டது. யானையின் இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. 

அத்துடன், யானையின் பற்கள் விழுந்துவிட்டதால் உணவை சாப்பிட முடியாத நிலை உருவானது. அதனால் சாப்பாடு, அவல் உள்ளிட்டவை மட்டுமே சாப்பிட்டு வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி மாலை திடீரென யானைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த யானைக்கு கால்நடைத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் உயிரிழந்தது. அதனால் யானைப் பாகன் அசன் மைதீன் அவரது உதவியாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் மிகுந்த துயரத்துடன் வலம் வருகின்றனர். 

இந்த நிலையில், உயிரிழந்த யானையை வனத்துறையினர் மருத்துவமனையில் இருந்து லாரி மூலம் பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டி முத்தூர் மலைப்பகுதிக்குக் கொண்டு சென்றார்கள். இன்று அந்த யானையின் உடலை வனத்துறையினர் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் யானையின் உடலுக்குப் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து யானை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது யானைப் பாகன் அசன் மைதீன், உதவியாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்துக்கு உள்ளாக்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!