கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த தினம் - துறைமுகத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி!

வ.உ.சிதம்பரனாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை ஒருநாள் மட்டும் தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட துறைமுக பொறுப்புக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

துறைமுகம்
 

தூத்துக்குடி துறைமுகமாக இருந்த இத்துறைமுகத்துக்கு கடந்த 2011-ம் ஆண்டு ``வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" எனப் பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட்டது. கடந்த 1974-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி, முதன்மைத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய துறைமுகமாகவும், கொள்கலன் முனையங்களில் கொச்சி, மும்பை மற்றும் சென்னை ஆகிய துறைமுகங்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில் 4வது துறைமுகமாகவும் விளங்கி வருகிறது. இத்துறைமுகத்திலிருந்து சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெறுகிறது. சரக்குகள் கையாளுதல், நிலக்கரி இறக்குமதி செய்தல், நிர்வாகம் ஆகியவற்றில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. மாநில, தேசிய அளவிலான பல விருதுகளையும் பெற்றுள்ளது. 

நாளை செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 147வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நாளை (5.9.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துறைமுகத்தினுள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது என துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!