``கவர்னருக்கு தி.மு.க கறுப்புக் கொடி காட்டினா நாங்க பச்சைக் கொடி காட்டுவோம்!" - கரூர் பா.ஜ.க. | Karur BJP against black flag protest of DMK

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (04/09/2018)

கடைசி தொடர்பு:15:49 (04/09/2018)

``கவர்னருக்கு தி.மு.க கறுப்புக் கொடி காட்டினா நாங்க பச்சைக் கொடி காட்டுவோம்!" - கரூர் பா.ஜ.க.

தமிழக ஆளுநர் வரும் 7-ம் தேதி கரூர் மாவட்டம் கடவூருக்கு வருகை தர உள்ளார். அப்போது, ``அவருக்கு கரூர் மாவட்ட தி.மு.க-வினர் கறுப்புக் கொடி காட்டினால், நாங்கள் அதற்கு எதிராக கவர்னரை வரவேற்று பச்சைக் கொடி காட்டுவோம்" என்று கரூர் மாவட்ட பா.ஜ.க-வினர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

ஆளுநர்


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் சென்று மாவட்ட வாரியாக ஆய்வு செய்வதும், அவரை எதிர்த்து அந்தந்த மாவட்ட தி.மு.க-வினர் கறுப்புக் கொடிகள் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்யவும், வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறவும் கடந்த மாதம் 20-ம் தேதி ஆளுநர் கரூர் வருகை தர இருந்தார். ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அப்போது மறைந்ததால், ஆளுநர் வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, வரும் 7-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளுநருக்கு எதிராக தி.மு.க-வினர் கறுப்புக் கொடிகள் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் வரும் 7-ம் தேதி கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் கறுப்புக் கொடி காட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட பா.ஜ.க-வினர், `` ஆளுநர் தமிழகம் முழுக்க ஆய்வு செய்து வருகிறார். இதனால், பல நன்மைகள் கிடைக்கின்றன. 'கவர்னரே பணிகளை ஆய்வு செய்கிறாரே' என்ற பயத்தில் பணிகள் அனைத்தும் 100 சதவிகிதம் சரியாக நடக்கின்றன. இதனால், மக்களுக்குதான் நன்மைகள் ஏற்படுது. அதனால், ஆளுநரின் இந்த ஆய்வு வரவேற்கத்தக்கதே. ஆனால், இதை பிடிக்காத தி.மு.க-வினர் கவர்னர் போகும் இடங்களில் எல்லாம் அவருக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார்கள். கரூர் வரும் கவர்னரை வரும் 7-ம் தேதி  மாவட்ட தி.மு.க-வினர் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வருது. அப்படி அவர்கள் கவர்னருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தால், நாங்கள் பச்சைக் கொடி காட்டி கவர்னரை வரவேற்போம்" என்றார்கள் அதிரடியாக!