`பெட்ரோல் விலை உயர்வு ஒரு பகல்கொள்ளை!’ - வைகோ கண்டனம்

மக்களின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் `பகல் கொள்ளை’ போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சுரண்டலில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ 82.41 காசுகள் டீசல் விலை லிட்டர் ரூ 75.39 காசுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 12 நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.72 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.31 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று மத்திய அரசு வழக்கமான பல்லவி பாடுகிறது. பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 71 ஆக வீழ்ச்சியடைந்து இருக்கிறது. நடப்பு 2018 ல் மட்டும் ரூபாய் மதிப்பு 10 விழுக்காடு சரிந்துவிட்டது.

உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளைத் தாறுமாறாக உயர்த்தி வரும் மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 34 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.37 க்கும் ஏற்றுமதி செய்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 காசும், டீசல் மீது ரூ.15.33 காசும் உற்பத்தி வரி விதிக்கின்றது. இதனுடன் தமிழக அரசு மதிப்புக் கூட்டு வரியாக பெட்ரோலுக்கு 34 விழுக்காடு என்றும், டீசலுக்கு 25 விழுக்காடு என்றும் வரி விதிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் உற்பத்தி வரி மற்றும் வாட் வரி காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கின்றன. இதன் சங்கிலித் தொடர் விளைவாக விலைவாசி அதிகரித்து வருகிறது. மக்களின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் `பகல் கொள்ளை’ போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சுரண்டலில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி, வாட் வரி விதிப்புகளை உடனடியாகக் குறைப்பதுடன், ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்து விலை உயர்வையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!