வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (04/09/2018)

கடைசி தொடர்பு:15:29 (04/09/2018)

`நான்தான் கார்டியன்' - கொலையுண்ட பெண்ணின் மகனை நெகிழவைத்த போலீஸ் உதவி கமிஷனர்

கொலை செய்யப்பட்ட பரிமளா

சென்னை ஒட்டேரியில் கொலை செய்யப்பட்ட பரிமளாவின் மகன் கார்த்திக்குக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் உதவி கமிஷனர் பாலமுருகன். அவரிடம், 'நானும் உங்களைப் போல போலீஸாகுவேன்' என்று கார்த்திக் தெரிவித்துள்ளார். 

சென்னை ஓட்டேரி, நம்மாள்வார்பேட்டையைச் சேர்ந்தவர் பரிமளா. இவரின் கணவர் கோவிந்தராஜ். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். பரிமளாவுக்கு 15 வயதில் கார்த்திக் என்ற ஒரு மகன் உள்ளார். அவர், சென்னையில் உள்ள பள்ளியின் விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு  படித்துவருகிறார். இந்த நிலையில் பரிமளா கடந்த 31-ம் தேதி இரவு கத்தியால் குத்தி கொலைச் செய்யப்பட்டார். அவரைக் கொலைச் செய்ததாக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சூர்யா என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். தாயும் தந்தையும் இழந்த பரிமளாவின் மகன் கார்த்திக்குக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் கொலை வழக்கை விசாரித்த அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன். இந்தத் தகவல் கிடைத்ததும் அவரிடம் பேசினோம். 

 ``நான் தமிழக காவல்துறையில் பணிக்குச் சேர்ந்து 23 ஆண்டுகளாகின்றன. என்னுடைய சர்வீஸில் பல வழக்குகளை விசாரித்துள்ளேன். திகிலான கொலை வழக்குகளைக்கூட விசாரித்திருக்கிறேன். அப்போது எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் இருப்பார்கள். ஆனால், பரிமளா கொலை வழக்கை விசாரித்தபோதுதான் அவரின் மகன் கார்த்திக்குக்கு யாருமில்லை என்ற தகவல் தெரியவந்தது. 

அதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் விசாரித்தேன். தாயை இழந்த சோகத்தில் காவல் நிலையத்தில் கார்த்திக் ஆதரவின்றி இருப்பதாக இன்ஸ்பெக்டர் என்னிடம்  கூறினார். கார்த்திக்குக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லை என்றதும் அவருக்கு உதவ வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. உடனே அது குறித்து என் மனைவி கலாராணியிடம் ஆலோசித்தேன். அதற்கு அவரும் ஒகே என்று கூறினார். உடனே கார்த்திக்கை தனியாகச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர், தாயை இழந்த சோகத்தில் இருந்தார். அவரிடம் ஆறுதலாகப் பேசினேன். என்னுடைய முடிவை அவரிடம் கூறினேன். அதற்கு கார்த்திக் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவர், தற்போது படிக்கும் விடுதியிலேயே தொடர்ந்து தங்கிப் படிக்கவும் அவரின் எதிர்காலத் தேவைகள் குறித்தும் விடுதி நிர்வாகிகளிடம் பேசினேன். இனி, கார்த்திக்குக்கு நான்தான் கார்டியன். அவனின் எல்லா தேவைகளையும் நான் செய்துகொடுப்பேன். 

 உதவி கமிஷனர் பாலமுருகன்

குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது மட்டும் காவலர்களின் பணி கிடையாது. குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதும் எங்களின் கடமைதான். அம்மாவைக் கொன்ற சூர்யாவை பழிக்குப் பழிவாங்கும் எண்ணம் கார்த்திக் மனதில் ஏற்படக்கூடாது. இதற்காகத்தான் நான் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்றார். 

கார்த்திக்கின் கார்டியனான உதவி கமிஷனர் பாலமுருகனுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது கார்த்திக் என்ற மகன் அவருக்கு கிடைத்துள்ளார். கார்த்திக்கிடம் உன்னுடைய  இலக்கு என்ன என்று உதவி கமிஷனர் பாலமுருகனிடம் கேட்டுள்ளார். அதற்கு, `நானும் உங்களைப்போல ஒரு போலீஸ் ஆகுவேன்' என்று கார்த்திக் தெரிவித்துள்ளார். `விருப்பம்போல அவரை படிக்க வைப்பேன். விடுமுறை நாள்களில் என் வீட்டுக்கு அழைத்துவருவேன். அவர் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பேன்' என்று நெகிழ்ச்சியோடு கூறினார் பாலமுருகன். 

உதவி கமிஷனர் பாலமுருகனின் செயலைக் கேட்ட உயரதிகாரிகள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே பாலமுருகனின் இந்த முடிவுக்கு தமிழக காவல்துறையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அவருக்கு ராயல் சல்யூட் அடித்துள்ளனர். சமூகவலைதளங்களிலும் பாலமுருகனுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.