பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் முருகனின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக எழுந்த புகாரில், பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி சி.பி.சி.ஐ.டி., காவல்துறை மூலம் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், நிர்மலா தேவி மற்றும் முருகனுக்கு தனித்தனியே நீதிமன்றங்களில் ஜாமீன் வழங்கக் கோரி, விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்தனர். ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தனர். இவர்கள், 120 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்துவரும் நிலையில், இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  இந்த வழக்கு  நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே நீதிமன்றம் கேட்டிருந்த படி அரசு தரப்பில் பதில் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்களைத் தெரிந்துகொள்ள மனுதாரரின் வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதையடுத்து, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதிக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஒத்திவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!