`பள்ளிக்குச் செல்லாமலேயே தேர்வெழுதலாம்!' - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

'பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களுக்கு, அடுத்த வருடம் முதல் ஜூலை மாதம் மட்டுமே மறுதேர்வு நடத்தப்படும்' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

செங்கோட்டையன்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடிவருகின்றனர். அதன்படி, நாளை தமிழ்கத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் தின விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ' அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களையும் நல்லாசிரியர் விருதுபெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “ ஆசிரியர் தினத்தையொட்டி 373 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூடவே, தூய்மையான 40 அரசுப் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருதும் வழங்கப்பட உள்ளது. இனி, பள்ளிகளுக்குச் செல்லாமலே நேரடியாக 8,10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதலாம். அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு, ஜூலை மாதம் மட்டுமே மறுதேர்வு நடத்தப்படும். ஜூலையில் நடக்கும் மறுதேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்த வருடமே பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பைத் தொடரலாம்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!