வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (04/09/2018)

கடைசி தொடர்பு:16:53 (04/09/2018)

`எதற்காக இந்த முடிவை எடுத்தாங்கனு தெரியல?’ - போலீஸாரிடம் கதறிய துணை நடிகர் 

துணை நடிகர் சித்தார்த், மனைவி ஸ்மிரிஜா

``சம்பவத்தன்று ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தோம். ஆனால், அவர் எதற்காகத் தற்கொலை செய்தார் என்று தெரியவில்லை'' எனத் துணை நடிகர் சித்தார்த் கதறியுள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த். இவர் மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவரின் மனைவி ஸ்மிரிஜா. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் விளம்பரம் தொடர்பான அலுவலகத்தை வீட்டிலேயே நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஸ்மிரிஜா, படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஸ்மிரிஜாவின் சடலத்தைப் போலீஸார் கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், சித்தார்த்துக்கும் அவரின் மனைவி ஸ்மிரிஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இருவரும் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். நள்ளிரவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சித்தார்த் ஹாலிலும், படுக்கையறையில் ஸ்மிரிஜாவும் தூங்கியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. ஸ்மிரிஜா தற்கொலை குறித்து மதுரவாயல் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சித்தார்த்திடம் போலீஸார் விசாரித்தபோது `ஹோட்டலுக்கு சந்தோஷமாகத்தான் சென்றோம். ஆனால், அவர் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை' எனக் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.