வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (04/09/2018)

கடைசி தொடர்பு:17:30 (04/09/2018)

`நேர்காணல் முடிந்து ஓராண்டு ஆகுது; பணி ஆணை வழங்கல’ - விண்ணப்பதாரர்கள் குமுறல்

``தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள 1,246 அங்கன்வாடி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு விண்ணப்பம் பெறப்பட்டு நேர்காணல் நடைபெற்றது. ஆனால், ஓராண்டு கடந்த நிலையிலும் தங்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை'' எனப் பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கத்தோடு குமுறுகிறார்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியபோது, ``தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1,246 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நேர்காணல் நடத்தப்பட்டது. எங்களுக்கு உடனடியாக வேலை கிடைச்சிடும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தோம். ஆனால், ஒரு வருசம் கடந்தும்கூட எங்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கவே இல்லை. இதனால் 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள்ல உதவியாளர்கள் உள்ளிட்ட பணி இடங்கள் காலியாக இருக்கு. அங்கன்வாடி பள்ளிகளில் படிக்கிற ஆயிரக்கணக்கான குழந்தைகள் முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருக்காங்க.

அங்கன்வாடியில் ஏற்கெனவே பணிபுரியக்கூடிய பணியாளர்களும் கூடுதல் பணி சுமைக்கு ஆளாக வேண்டியிருக்கு. எங்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்காமல் தாமதப்படுத்துவதற்கான காரணம் தமிழக அரசா, தஞ்சை மாவட்ட நிர்வாகமானு தெரியலை. எங்களுக்கு பணி ஆணை வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கணும். இதுல ஏதாவது முறைகேடு நடக்குதோனு எங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய சந்தேகத்தைத் தீர்க்கணும்” என்கிறார்கள்.