வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (04/09/2018)

கடைசி தொடர்பு:17:14 (04/09/2018)

`டிக்கெட் கட்டணம் உயர்த்தியும் பலன் இல்லை!’ - இயக்கத்தை நிறுத்திய 300 பேருந்துகள்

தற்போது ஏ.சி பேருந்துகள் ஏறக்குறைய நிறுத்தப்பட்டுவிட்டன. வெறும் 4 அல்லது 5 பேருந்துகள்தான் தற்போது இயங்கிக்கொண்டிருக்கின்றன.

சென்னை மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. `முறையான பராமரிப்பு இல்லாததும் வருமானம் குறைந்ததும்தான் காரணம்' என்கின்றனர் போக்குவரத்துத்துறை ஊழியர்கள். 

அரசுப் பேருந்து

சென்னை மாநகரத்தில் 3,500-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் எக்ஸ்பிரஸ் டீலக்ஸ், வெள்ளை நிற போர்டு, டிஜிட்டல் போர்டு எனப் பல்வேறு வகையான பேருந்துகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் 92 உயர்தர ஏ.சி பேருந்துகளும் அடக்கம். இந்தக் கணக்குகள் எல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முந்தையவை. தற்போது இந்த எண்ணிக்கை 5 ஆக குறைந்துவிட்டதாகக் கவலைப்படுகின்றனர் போக்குவரத்துத்துறை ஊழியர்கள். அண்மைக்காலமாகச் சென்னையின் பல பகுதிகளில் ஏ.சி பேருந்துகள் பழுதாகி நிற்பதையும் ஏ.சி செயல்பாட்டில் இல்லாமல் பயணிகளுக்குச் சிரமம் ஏற்பட்ட சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பேருந்துகளின் ஆயுள்காலம் முடியவில்லை என்பதுதான் உச்சகட்ட கொடுமை. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால்தான் இந்தப் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்துகின்றனர் ஊழியர்கள். 

சி.ஐ.டி.யு போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகி சந்திரனிடம் பேசினோம். “சென்னையில் இப்போது 3,500 பேருந்துகள்தான் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் வருமானம் இல்லை என்று கூறி பெரும்பாலான வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 300 பேருந்துகள் வரையில் குறைக்கப்பட்டுள்ளன. ஏ.சி பேருந்துகளைப் பொறுத்தவரை, அது மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தின்கீழ் வாங்கப்பட்டவை. அந்தத் திட்டத்தின்படி, பேருந்துகளின் மொத்தக் கொள்முதலில் குறைந்தபட்சம் இத்தனை ஏ.சி வால்வோ பேருந்துகள் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில் வாங்கப்பட்டதுதான் இந்த ஏ.சி பேருந்துகள். இதில் நாம் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. 

தற்போது ஏ.சி பேருந்துகள் ஏறக்குறைய நிறுத்தப்பட்டுவிட்டன. வெறும் 4 அல்லது 5 பேருந்துகள்தான் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பேருந்துகளை அண்ணா நகர், அடையார் டிப்போக்களில் பார்க்கலாம். முறையாகப் பராமரிப்பு இல்லாததுதான் இதற்குக் காரணம். இவற்றைப் பழுது பார்ப்பது தொடர்பாக நிர்வாகத்திடம்தான் கேட்க வேண்டும். சாதாரணப் பேருந்துகளையே முறையாகப் பராமரிக்காத நிலைதான் உள்ளது. இதில் ஏ.சி பேருந்துகளைப் பராமரிப்பது தொடர்பாக எதையும் எதிர்பார்க்க முடியாது. 

டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டபோதும் வருமானம் இல்லை. ஏ.சி பேருந்துகளில் பணியாற்றிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சாதாரண பேருந்துகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரையில் புதிதாக யாரையும் பணிக்கு எடுப்பது இல்லை. பேருந்துகளின் எண்ணிக்கையைத்தான் குறைத்துக்கொண்டே வருகின்றனர்" என்றார் நிதானமாக.