வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (04/09/2018)

கடைசி தொடர்பு:17:56 (04/09/2018)

`ஷோபியா பண்ணது தப்புதான். ஆனால்...’ - மையமாகக் கருத்து தெரிவித்து குழப்பிய மாதவன்

மாணவி ஷோபியா விவகாரத்தில், மாதவன் தன் ஃபேஸ்புக்கில்  வெளியிட்ட கருத்தால், அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

மாதவன்
 

பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நேற்று சென்னையிலிருந்து விமானம்மூலம்  தூத்துக்குடிக்குச் சென்றார். அதே விமானத்தில், கனடாவில் பிஹெச்.டி ஆய்வு மேற்கொண்டுவரும் ஷோபியா பயணம் செய்தார். விமானத்தில் தமிழிசையைப் பார்த்த ஷோபியா, ’பாசிச பா.ஜ.க ஒழிக’ என்று கோஷம் எழுப்பியுள்ளார். இதையடுத்து, விமான நிலையம் வந்ததும், பா.ஜ.க-வினருக்கும் மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய காவல் ஆய்வாளரிடம் தமிழிசை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஷோபியா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்  இன்று ஜாமீன் வழங்கியது.

பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட ஷோபியாவுக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தன. தமிழக அரசியல் தலைவர்கள் சிலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம்குறித்து ஜெ.ஜெ. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஜெ.தீபாவின் கணவருமான மாதவனும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது சமூக பிரச்னைகள்குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துவரும் மாதவன், ஷோபியா குறித்துப் பதிந்த பதிவில், `மாணவி ஷோபியா, தனது பேச்சுரிமையை வேறு இடத்தில் காட்டியிருக்கலாம். வேண்டும் என்றே மற்றவரை வெறுப்பேற்றும் வகையில் விமான நிலையத்தில் காட்டியது தவறாக இருந்தாலும், விடுமுறைக்கு தாயகம் திரும்பியுள்ள மாணவியை தாயுள்ளதோடு மன்னித்து வழக்கை வாபஸ் பெற்று அவர் மறுபடியும் அயல்நாடு சென்று கல்வியைத் தொடர அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மாதவன்  பதிவுசெய்த சிறிது நேரத்தில், நெட்டிசன்கள் அவரை விமர்சித்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர்.  `ஷோபியா, அரசு மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் யாரையும் வெறுப்பேற்றுவதற்காக இப்படிச் செய்யவில்லை’ என்று பலர் மாதவனின் பதிவின் கீழ் கமென்ட் செய்துவருகின்றனர். ஒருசிலர், மாதவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.  இன்னும் சிலர், ‘ மாதவன் ஷோஃபியாவுக்கு ஆதவரவாகவும், பா.ஜ.கா-வுக்கு ஆதரவாகவும் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் மையமாகக் கருத்து தெரிவித்து குழப்புகிறார்’ என்று கலாய்த்துவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க