வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (04/09/2018)

கடைசி தொடர்பு:20:10 (04/09/2018)

நெல் கொள்முதலுக்கு பணம், சாக்குகள் தயார் நிலையில் உள்ளதா? சந்தேகம் எழுப்பும் விவசாய சங்கம்

விவசாயி

தஞ்சை மாவட்டத்தில், குறுவை நெல் கொள்முதல் செய்ய 19 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார். இந்நிலையில், குறுவை நெல்லை முழுமையாகக் கொள்முதல்செய்வதற்குத் தேவையான பணமும் சாக்குகளும் தயார் நிலையில் உள்ளதா? என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

சுகுமாரன்இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத் தலைவர் சுகுமாரன் , ‘’தஞ்சை மாவட்டத்தில் சாகுபடிசெய்துள்ள குறுவை நெல் தற்போது அறுவடைக்கு வரத் தொடங்கியுள்ளது. இதை முழுமையாகக் கொள்முதல்செய்ய மாவட்டம் முழுவதும் பரவலாக 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்க வேண்டும். ஆனால், 19 இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

தற்போது திறக்கப்பட்டுள்ள 19 கொள்முதல் நிலையங்களிலாவது நெல் கொள்முதல் ஒழுங்காக நடைபெற தமிழக அரசு இதற்கான ஆயத்தப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ள வேண்டும். கோடை சாகுபடி நெல்லை கொள்முதல் செய்ய, போதிய சாக்குகள் இல்லாமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டார்கள். தற்போது, அதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. கொள்முதல் செய்ய போதிய அளவில் பணம்இல்லை என்ற குறையும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு உடனடியாகக் கவனம்செலுத்த வேண்டும்” என்றார்.