வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (04/09/2018)

கடைசி தொடர்பு:19:09 (04/09/2018)

`கருணாஸ் நிலைப்பாடு புரியவில்லை!' - தனியரசு எம்.எல்.ஏ ஆதங்கம்

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். அதேநேரம், ' எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது' என்கிறார், தனியரசு எம்.எல்.ஏ. 

மூவர் கூட்டணி

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தத் தீர்ப்பைப் பெரிதும் நம்பியிருக்கிறார் தினகரன். அதேநேரம், ' அ.தி.மு.க அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியானால், அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சி      எம்.எல்.ஏ-க்களான தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள்' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

தனியரசு எம்.எல்.ஏ-விடம் பேசினோம். 

`` எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. எந்தத் தரப்புக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும், அவர்கள் மேல்முறையீடுசெய்வார்கள். அதனால், இந்த வழக்கு இன்னும் 6 மாதங்களுக்கு நடக்கும் என்றே நினைக்கிறேன். அதேநேரம், திட்டமிட்டபடி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். ஆனாலும், அது தொடர்பாக எதையும் இப்போது கூறமுடியாது. கூட்டணி உள்பட பல விஷயங்கள் அதில் அடங்கியுள்ளன. தேர்தலிலும் நங்கள் மூன்று பேரும் இணைந்து செயல்படுவோம் என்று கூறமுடியாது. ஏற்கெனவே, நாங்கள் திட்டமிட்டு இணையவில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றாக இணைந்து செயல்பட்டோம். ஜல்லிக்கட்டு, நீட், மாட்டிறைச்சி விவகாரம், காவிரிப் போராட்டம் எனப் பல இடங்களில் ஒன்றாகப் பணியாற்றினோம். 

தனியரசுஆனால், அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் திட்டமிடவில்லை. தற்போதும் அதேநிலை நீடிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரே அணியில் இருப்போம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவரவருக்குத் தனியாக அரசியல் சார்பு நிலை உள்ளது. குறிப்பாக, தி.மு.க நடத்திய போட்டி சட்டமன்றக் கூட்டத்தில் கருணாஸ் கலந்துகொண்டார். நானும் அன்சாரியும் அந்தக் கூட்டத்துக்குச் செல்லவில்லை. அவர் கலந்துகொண்டது அவரது விருப்பம். ஆனால், தி.மு.க நடத்திய பல்வேறு கூட்டங்களில் அவர் கலந்துகொள்ளவில்லை. அதனால், அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனினும், எங்களுக்குள் பெரிய இடைவெளி எதுவும் இல்லை. அறவே இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை இன்னும் எங்களுக்குள் ஏற்படவில்லை.

அரசியல் களத்தில் புதிதாக ரஜினியும் கமலும் வந்துள்ளனர். ரஜினி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மறுக்கிறார். சட்டமன்றத் தேர்தலைத்தான் எதிர்பார்த்துள்ளார். அதற்காக, தான் கட்சி தொடங்குவதையும் தள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறார். தேர்தல் நேரத்தில் கட்சி ஆரம்பித்து, அதன்மூலம் வெற்றிபெற முடியும் என்று அவர் நம்புகிறார். ஆனால், மக்கள் அவர் விரும்பும் முடிவை அளிக்க மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் இருவரும் ஏதேனும் அணியில் இணைந்து செயல்பட்டால், சிறு தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்றார் நிதானமாக.