32 வகையான விநாயகர் சிலைகள்… மாமல்லபுரம் சிற்பி அசத்தல்!

மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த சிற்பி ஒருவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 வகையான விநாயகர் சிலைகளைச் செய்திருக்கிறார். இதுவரை யாரும் இதுபோன்று 32 வகையான விநாயகர் சிலைகளையும் செய்ததில்லை என்கிறார் அவர்.

மாமல்லபுரம் சிற்பம், விநாயகர் சிலைகள்

மாமல்லபுரம் பகுதியில் செய்யப்படும் சிற்பங்கள் உலகப் பிரசித்திபெற்றவை. பல்வேறு நாடுகளுக்கும் மாமல்லபுரத்தில் செய்யப்படும் சிற்பங்கள் ஏற்றுமதியாகின்றன. ஆன்மிக சிற்பங்கள், தலைவர்கள் சிலைகள், கலைநயம் மிக்க பூங்காவில் வைக்கக்கூடிய சிற்பங்கள் எனப் பல்வேறு வகையான சிற்பங்களையும் இங்குள்ள சிற்பிகள் செய்துவருகிறார்கள்.

மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிற்பக்கலை விரிவுரையாளர் பத்மநாபன் 32 வகையான விநாயகர் சிலைகளைச் செய்திருக்கிறார். தமிழ்நாடு - கேரள எல்லையில் மெய்யாற்றங்கரை ஓரத்தில் செங்கால் என்ற கிராமம் உள்ளது. அங்கு சிவசக்தி ஷேத்திரம் என்னும் ஆன்மிக தலத்தில் இருந்து சுவாமி ஒருவர் கேட்டிருந்ததின் பெயரில் இந்தச் சிலைகளை பத்மநாபன் செய்து கொடுத்திருக்கிறார்.

மாமல்லபுரம் சிற்பம், விநாயகர் சிலை

இதுகுறித்து சிற்பி பத்மநாபனிடம் பேசினோம். “பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும் சித்தி விநாயகர் சிலைதான் வைப்பார்கள். அதில் நான்கு கைகள் இருக்கும். துதிக்கை மட்டும் ஒரு சில சிலைகளில் மாறுபட்டு இருக்கும். இந்த விநாயகரைத்தான் செல்வ விநாயகர், வெற்றி விநாயகர், பால விநாயகர், சித்தி விநாயகர் எனத் தங்களுக்கு ஏற்றாற்போல ஒரு பெயரை வைத்து வழிபடுவார்கள். சிற்ப சாஸ்திரத்தில் 32 வகையான விநாயகர் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். 32 விநாயகருக்கும் 32 ஸ்லோகம் உண்டு. அவற்றின்படி இந்தச் சிலையை நாங்கள் அமைத்திருக்கிறோம். கடந்த ஆறு மாதமாக இந்தச் சிலைகளை 10 சிற்பிகள் சேர்ந்து செய்து முடித்துள்ளோம். பீடம் தனியாகவும் விக்கிரகம் தனியாகவும் இருக்கும்படி சிலைகளைச் செய்திருக்கிறோம். இன்னும் சில தினங்களில் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியன்று 32 வகையான விநாயகர்களுக்கும் சிறப்பு பூஜை செய்ய உள்ளார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்று ஒரே இடத்தில் 32 விநாயகரையும் எந்தக் கோயிலிலும் காண முடியாது” என்கிறார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!