வெளியிடப்பட்ட நேரம்: 22:50 (04/09/2018)

கடைசி தொடர்பு:22:50 (04/09/2018)

ஷோபியா படிப்பைத் தொடர அனுமதியுங்கள் - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

'தூத்துக்குடி மாணவி ஷோபியா மீதான வழக்கை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற்று, அவர் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்' என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின்

சென்னையிலிருந்து நேற்று விமானம்மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் பிஹெச்.டி படிக்கும் ஆராய்ச்சி மாணவியான லூயிஸ் ஷோபியா என்பவரும் பயணித்துள்ளார். அப்போது, விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்து பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக என்று கோஷம் எழுப்பினார். அதையடுத்து, தமிழிசை சௌந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபியா கைதுசெய்யப்பட்டார். ஷோபியா கைது செய்யப்பட்டதற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ட்விட்டரில் #பாசிச பா.ஜ.க_ஆட்சி ஒழிக என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 'கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில், தங்களின் பினாமி அ.தி.மு.க அரசு தமிழகத்தில் இருப்பதால், எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பா.ஜ.க செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப்பெற்று, அவர் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.