வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (04/09/2018)

கடைசி தொடர்பு:19:23 (05/09/2018)

கோகுல்ராஜ் உடையைக் கட்டித்தழுவி கதறி அழுத தாய்... வேடிக்கை பார்த்த யுவராஜ்!

கோகுல்ராஜ் உடையைக் கட்டித்தழுவி கதறி அழுத தாய்... வேடிக்கை பார்த்த யுவராஜ்!

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த வழக்கு மூன்று வருடம் கழித்து தற்போது நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஸ்வாதி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க இருந்ததால் இவ்வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், வயது 23. இவர் கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் 24-ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொட்டிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கோகுல்ராஜ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அவருடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவி ஸ்வாதி, வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இதன் காரணத்தாலேயே கோகுல்ராஜ் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாகப் பேசப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டதில் கோகுல்ராஜ் சடலமாக மீட்கப்பட்டதற்கு முதல் நாள், அதாவது 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கோகுல்ராஜூம் ஸ்வாதியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் கோகுல்ராஜை கடத்திச் செல்லும் காட்சி கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. யுவராஜூம் அவருடைய ஆட்களும் சேர்ந்து கோகுல்ராஜை ஆணவப் படுகொலை செய்துவிட்டு, அதைத் திசை திருப்புவதற்காக ரயில் தண்டவாளத்தில் போட்டிருப்பதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து யுவராஜ் மற்றும் அவருடைய சகோதரர் தங்கதுரை, இவர்களுடன் இருந்த அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், யுவராஜ் கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில், யுவராஜ் மற்றும் அமுதரசு காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். தலைமறைவாக இருந்து கொண்டு புதிய, புதிய வீடியோக்களையும் ஆடியோக்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் யுவராஜ். இதனால், தமிழக காவல்துறைக்கு பெரும் தலைவலியும் யுவராஜை பிடிப்பது பெரும் சவாலாகவும் இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி, விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொள்ள, மேலும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது தமிழகம். 100 நாள்களுக்குப் பிறகு யுவராஜ் தாமாக முன்வந்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி, அலுவலகத்தில் சரண் அடைந்தார். அதையடுத்து யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும் மற்றவர்கள் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மூன்று வருடங்களுக்குப் பிறகு இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

கோகுல்ராஜ் அம்மா சித்ராநாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில்
கடந்த 30-ம் தேதி வழக்கு நடைபெற்றது. கோகுல்ராஜ் தரப்பில் வாதிட தமிழக அரசு நியமித்த சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார். யுவராஜ் தரப்பில் மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஜி.கே என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ ஆஜரானார். அன்று கோகுல்ராஜ் தரப்பில் முதல் சாட்சியாக அவருடைய அம்மா மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். யுவராஜ் தரப்பில் தலைமறைவாக உள்ள அமுதரசு, சுட்டுக் கொல்லப்பட்ட ஜோதிமணியைத் தவிர மற்ற 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். முதலில் கோகுல்ராஜின் அம்மா சித்ராவின் பெயர் அழைக்கப்பட்டதை அடுத்து கூண்டில் ஏறி நின்றார். அவரிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, ''கோகுல்ராஜை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? வீட்டிலிருந்து கிளம்பும்போது என்ன சொல்லி விட்டுச் சென்றார்" என்ற கேள்விகளைக் கேட்டார். எதிரே நின்றுகொண்டிருந்த யுவராஜைப் பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு கண்ணீர்விட்டு கதறி அழத்தொடங்கினார் கோகுல்ராஜின் அம்மா சித்ரா. அதையடுத்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 2.50 மணிக்கு நீதிமன்றம் தொடங்கியது.

கோகுல்ராஜின் அம்மா சித்ராவைப் பார்த்து நீதிபதி, "நீதிமன்றத்தில் தகாத வார்த்தைகள் பேசக் கூடாது. உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்" என்று மென்மையாகத் தெரிவித்தார்.

அதையடுத்து கோகுல்ராஜ் கடைசியாக அணிந்திருந்த பேன்ட், சட்டையைக் காண்பித்து 'இது கோகுல்ராஜ் அணிந்திருந்த துணிகளா' என்று அடையாளம் காட்டச் சொன்னார்கள். அந்தத் துணிகளை மார்போடு அணைத்துக்கொண்டு மேற்கொண்டு பேச முடியாமல் சித்ரா அழுததால், 1-ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைத்துவிட்டு 'உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேசுங்கள்' என்று தெரிவித்தார் நீதிபதி.

1-ம் தேதி விசாரணைத் தொடங்கியது...

பகல் 12.00 மணியளவில் விசாரணை ஆரம்பித்தபோது, கோகுல்ராஜ் அம்மா சித்ராவிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே குறுக்கு விசாரணை நடத்தினார்.

வழக்கறிஞர் ஜி.கே: "கோகுல்ராஜ் அவருடைய நண்பர்கள் சிலரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்தக் கொலை நடந்துள்ளது."

கோகுல்ராஜ் அம்மா சித்ரா: (கண்ணீரோடு...): "என் பையன் அந்தளவுக்கு கடன் வாங்க மாட்டான்."

வழக்கறிஞர் ஜி.கே: "கோகுல்ராஜூக்கும் அவருடைய அண்ணனுக்கும் முன் விரோதம் இருந்தது. அதனால்கூட இச்சம்பவம் நடந்திருக்கலாம்."

இதுபோன்ற கேள்விகளை சற்றும் எதிர்பார்க்காத சித்ரா பதில் சொல்ல முடியாமல் மறுத்துக்கொண்டே நின்றார். பிறகு, உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றம் தொடங்கியது. அப்போது வழக்கறிஞர் ஜி.கே, கேட்ட கேள்விகளுக்கு குழப்பத்தில் இருந்த சித்ரா முன்னுக்குப் பின் முரணான பதில்களைத் தெரிவித்தார். "கடைசியாகக் கோகுல்ராஜ், வீட்டிலிருந்து கிளம்பும்போது என்ன சொல்லிவிட்டு சென்றார்" என்ற கேள்விக்கு, முதலில் 'கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றான்' என்றவர், பிறகு 'நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாகக் கிளம்பினார்' என்றார்.

"கல்லூரிக்குச் செல்லும்போது புத்தகம் எடுத்துச் சென்றானா" என்று கேட்டதற்கு.

"இல்லை. கல்லூரி ஐ.டி கார்டு, பர்ஸ் கொண்டு சென்றான்" என்றார் சித்ரா.  

"இந்த நீதிமன்றத்தில் நீங்கள் அளித்த சாட்சியங்கள் அனைத்தும் காவல்துறையில் புகார் அளிக்கும்போது கூறியிருக்கிறீர்களா" என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எதையோ சொல்வதற்கு சித்ரா முயன்றார்.

யுவராஜ்

அதற்கு யுவராஜ் வழக்கறிஞர் ஜி.கே, "நான் கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள்" என்றார். ஆனால், சித்ரா தொடர்ந்து ஏதோ சொல்ல முயல, நீதிபதி குறுக்கிட்டு 'ஏற்கெனவே நீங்கள் விளக்கமாகப் பதில் சொல்லிவிட்டீர்கள். இப்போது கேட்கப்படும் கேள்விக்கு ஆம், இல்லை என்று சொன்னால் போதுமானது' என்றார்.

அதற்கு சித்ரா, "இப்படிச் சொன்னால் எப்படிங்கய்யா எங்க தரப்பு நியாயத்தைச் சொல்ல முடியும்?" என்று கூறியவாரே பேசத் தொடங்கினார். அதைக் கண்டுகொள்ளாத யுவராஜ் வழக்கறிஞர், "இந்த அம்மா பேசுவதை ரெக்கார்ட் செய்துவிட்டுச் சொல்லுங்கள். மீண்டும் நான் குறுக்கு விசாரணை செய்துகொள்கிறேன்" என்றார். அதையடுத்து கோகுல்ராஜ் அம்மா பேசியவற்றை நீதிமன்றம் ரெக்கார்ட் செய்துகொண்டது. அதன் பிறகு யுவராஜ் வழக்கறிஞர் ஜி.கே, சில கேள்விகளைக் கேட்டுவிட்டு நிறைவு செய்தார்.

அதையடுத்து நீதிபதி கே.ஹெச்.இளவழகன் வழக்கை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 4-ம் தேதியான இன்று  இவ்வழக்கின்  இரண்டாவது முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் நெருங்கியத் தோழி ஸ்வாதியும் கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வனும் ஆஜராகி வாக்குமூலம் சொல்ல இருந்தனர். இவ்வழக்கில் ஸ்வாதியின் வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார் ஸ்வாதி.

நிதிமன்றத்தின் அடுத்த நாள் நகர்வுகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

கோகுல்ராஜ் கொலையில் நடந்தது என்ன? வெளியானது ஸ்வாதி பகிர்ந்த தகவல்கள்


டிரெண்டிங் @ விகடன்