வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (05/09/2018)

கடைசி தொடர்பு:01:00 (05/09/2018)

‘டி.எஸ்.பி-யை கைதுசெய்யுங்கள்!’ - ஈரோடு எஸ்.பி-யிடம் பா.ம.க நிர்வாகி பகீர் புகார்!

குற்றவாளிக்கு சாதகமாகச் செயல்பட்ட டி.எஸ்.பி-யைக் கைதுசெய்ய வேண்டுமென பா.ம.க நிர்வாகி ஒருவர் ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாமக போராட்டம்

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நல்லமங்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராகவும், அருந்ததியர் இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளராகவும் இருக்கிறார். இவர், கடந்த செப்டம்பர் 1-ம் தேதியன்று இரவு 10 மணியளவில் பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருக்கிறார். மேலும், பின்தொடர்ந்து வந்தவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறுசெய்திருக்கிறார். இதையடுத்து, உடனடியாக வடிவேல்,போன் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, மறுநாள் அரச்சலூர் புகார் அளித்த பா.ம.க நிர்வாகிபோலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கைப்பட புகார் மனு ஒன்றை எழுதிக்கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் கோபி என்பவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல் என மொத்தம் 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இருந்தும் வழக்குப்பதிவுசெய்த நபர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீஸார் விடுதலை செய்திருக்கின்றனர். 

இதனால், கோபமடைந்த பா.ம.க நிர்வாகி வடிவேல், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஈரோடு எஸ்.பி-யை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பெருந்துறை டி.எஸ்.பி-யின் தலையீட்டால்தான் குற்றவாளி விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் என்றும், குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்ட டி.எஸ்.பி-யையும் கைதுசெய்ய வேண்டும் என பகீர் கிளப்பினார்.

இதுகுறித்து பா.ம.க நிர்வாகி வடிவேலிடம் பேசினோம். “செப்டம்பர் 1-ம் தேதியன்று இரவு 10 மணியளவில் நான் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, என்னை வழிமறித்த மர்ம நபர், ‘நீ என்ன ஜாதி சங்கத்துக்கு பெரிய தலைவரா? இனிமேல் நீ இந்த ஊர்ப் பக்கம் வரக்கூடாது. காருடன் சேர்த்து உன்னோட குடும்பத்தையும் கொளுத்திடுவேன்’ என மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். இது சம்பந்தமாக நான் புகார் தெரிவிக்க, அந்த நபர்மீது போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், பெருந்துறை டி.எஸ்.பி., ராஜ்குமார் தலையீட்டால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். எனவே, குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்ட பெருந்துறை டி.எஸ்.பி-யையும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்து கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த வழக்கை வேறு டி.எஸ்.பி-யை நியமித்து குற்றவாளியைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.