``தில்லுமுல்லு சார்-பதிவாளர்கள்..!'' கிடுக்கிப்பிடி போடும் ஐ.ஏ.எஸ்

``தில்லுமுல்லு சார்-பதிவாளர்கள்..!'' கிடுக்கிப்பிடி போடும் ஐ.ஏ.எஸ்

வண உரிமையாளர்களின், பதிவு முடிந்த பத்திரங்களைத் திருப்பியளிக்காத சார்-பதிவாளர்களிடம், ஆதாரத்தைக் காட்டி எச்சரித்துள்ளார் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். பத்திரப்பதிவு முடிந்த ஆவணங்களைத் திரும்பக் கொடுப்பது குறித்து புதிய ஆணைகளை அவர் பிறப்பித்துள்ளார். இதனால், தில்லுமுல்லு சார்-பதிவாளர்களைக் கிடுக்குப்பிடி போட்டுள்ளார் அவர்.

தமிழ்நாட்டில், பத்திரம் பதிவு செய்வது கடந்த பிப்ரவரி 12-ம் தேதியிலிருந்து ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்படி, ``ஆன்லைனில் பதிவு செய்யும் பத்திரங்களை உடனடியாகத் திருப்பித்தருவது இல்லை என்றும், ஆன்லைனில் பதிவு செய்வதற்கு வழங்கப்படும் டோக்கன் சிஸ்டத்திலும் முறைகேடு நடக்கிறது'' என்றும் பத்திரப்பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரனுக்குப் புகார் சென்றது. இதுகுறித்து, மாவட்டப் பதிவாளர்கள் உரிய ஆய்வுகளைச் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியதுடன், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நிலுவையில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். அதன் பிறகும், இந்தப் பிரச்னை தீரவில்லை. பத்திரம் பதிவு செய்யும் வரிசை முறைக்கு புதிய மென்பொருள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆடியோ ஆதாரம்:

இந்நிலையில், ''பதிவு முடிந்த பத்திரங்களை மூன்று நாள்களுக்குள் உரிமையாளர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும்'' என்று குமரகுருபரன், ஒரு மாதத்துக்கு முன்பு உத்தரவிட்டார். இந்த உத்தரவு, எந்த அளவில் நிறைவேற்றப்படுகிறது என்று 100 சார்-பதிவாளர் அலுவலகங்களில் டி.சி.எஸ் மென்பொருள் நிறுவனத்தின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டது. பத்திரங்களைத் திருப்பிக் கொடுப்பது தொடர்பாகச் சென்னை மண்டல சார்-பதிவாளர்களை அழைத்து பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் விசாரித்தார். அதற்கு அவர்கள், ''உடனுக்குடன் பத்திரங்கள் திருப்பி அளிக்கப்படுகின்றன'' என்று தெரிவித்தனர். 

ஆனால், குறிப்பிட்ட அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்தவர்களிடம் டி.சி.எஸ் பணியாளர்கள் போன் மூலம் விசாரித்தபோது, பலரும் பத்திரம் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். இந்த ஆடியோ பதிவுகளைக் குறிப்பிட்டதுடன், சார்-பதிவாளர் முன்னிலையில் போட்டுக் காட்டியும் எச்சரித்துள்ளார் குமரகுருபரன். இதனால் பத்திரம் திருப்பிக் கொடுப்பதில் தில்லுமுல்லு செய்த சார்-பதிவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருந்தாத இந்தச் சார்-பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பத்திரப்பதிவுத்துறை யோசித்து வருகிறது.

சார் பதிவாளர் அலுவலகம்

ஜெ.குமரகுருபரன் அறிக்கை:

இந்நிலையில், தமிழக பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்யப்படும்போது அந்த ஆவணத்துக்குத் தேவையான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு உரிய ரசீது சார்-பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு, ஆவணத்தைப் பதிவுக்குத் தாக்கல் செய்தவருக்கு அளிக்கப்படுகிறது. அசல் ஆவணத்தைப் பதிவுக்குத் தாக்கல் செய்தவர் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தாக்கல் செய்தவர் அசல் ஆவணத்தைத் திரும்பப் பெற சார்-பதிவாளர் அலுவலகம் வர இயலாத நிலையில், ஆவணத்தை /ஆவணச்சுருக்கத்தை இணையதளத்தில் உருவாக்கும்போது அந்த ஆவணத்தைத் திரும்பப் பெற உரிய நபரை நியமனம் செய்யலாம். ஆவணப் பதிவின்போது ஆவணத்தைத் திரும்பப் பெற நியமனம் செய்யப்பட்டவரின் விரல் ரேகை பதிவு செய்யப்படும். 

ஆவணத்தைத் தாக்கல் செய்தவரோ / ஆவணத்தைத் திரும்பப் பெற அதிகாரம் பெற்றவரோ ஆவணத்தைத் திரும்பப் பெற நேரில் சார்-பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். பதிவு விதிகள் 1949 விதி 103-ன்படி ரசீதினை, சார்-பதிவாளர் அலவலகத்திலிருந்து ஆவணத்தைத் திரும்பப் பெறும்போது சார்-பதிவாளரிடம் அளிக்க வேண்டும். பின்பு தாக்கல் செய்தவர் / திரும்பப் பெற அதிகாரம் பெற்றவரின் விரல் ரேகை கவரப்படும். இந்த விரல் ரேகை ஆவணப்பதிவின்போது பெறப்பட்ட விரல் ரேகையுடன் மென்பொருளால் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இந்த விரல் ரேகை உரிய நபரின் விரல் ரேகையாக இருப்பின், மென்பொருள் வழி சார்-பதிவாளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். சார்-பதிவாளரால் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்பே ஆவணம் உரிய நபருக்குத் திரும்ப வழங்கப்படும்.

சார்-பதிவாளர் அலுவலகங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. சராசரியாக ஒருநாளைக்கு 20-க்கும் குறைவான ஆவணங்கள் பதிவாகும் சார்-பதிவாளர் அலுவலகங்களில், ஆவணப்பதிவிலிருந்து இரண்டாவது வேலை நாளில் ஆவணம் வழங்கப்படும். இருபதுக்கும் மேல் பதிவாகும் சார்-பதிவாளர் அலுவலகங்களில், ஆவணப் பதிவிலிருந்து மூன்றாவது வேலை நாளில் ஆவணங்கள் திரும்ப வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆவணம் திரும்ப வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் ஆவணப் பதிவின்போது வழங்கப்படும் ரசீதில் குறிக்கப்பட்டிருக்கும். ரசீதில் குறிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் உரிய நபர் சார்-பதிவாளர் அலுவலகம் வந்து அசல் ஆவணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். 

அசல் ஆவணத்தை ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் திரும்ப வழங்காவிடில், 1800 102 5174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். உரிய நாளில் ஆவணம் சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து திரும்பப் பெறப்படாத நிலையில், அந்த ஆவணத்துக்குப் பாதுகாப்புக் கட்டணம் சார்-பதிவாளரால் ஆவணம் திரும்ப வழங்கும்போது வசூலிக்கப்படும்'' என்றார்.

தில்லுமுல்லு சார்-பதிவாளர்கள் இனியாவது திருந்துவார்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!