ரூ.400 கோடி ஏடிஎம் கொள்ளை வழக்கு - முக்கிய குற்றவாளி மீது குண்டாஸ் பாய்ந்தது! | 400 crore ATM robbery case; goondas act fired on the main culprit

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (05/09/2018)

கடைசி தொடர்பு:01:30 (05/09/2018)

ரூ.400 கோடி ஏடிஎம் கொள்ளை வழக்கு - முக்கிய குற்றவாளி மீது குண்டாஸ் பாய்ந்தது!

ரூ.400 கோடி ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருஜி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்திருக்கிறது.


சந்துருஜி

ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி, அதன்மூலம் போலி ஏடிஎம் அட்டைகளைத் தயாரித்து சுமார் 400 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்தக் கும்பலை கேரள மாநிலப் போலீஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில், புதுச்சேரியில் வைத்து சுற்றி வளைத்தது புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீஸ். கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடந்த இந்த அதிரடி நடவடிக்கையில் அடுத்தடுத்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்தியா கைது செய்யப்பட்டுவிட, முக்கிய குற்றவாளி என்று போலீஸாரால் சொல்லப்பட்ட அ.தி.மு.க பிரமுக சந்துருஜி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார்.

அதையடுத்து, ``இந்தக் கொள்ளைகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட முக்கியக் குற்றவாளி சந்துருஜிதான். சுமார் 90 சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வரும் அவர், அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றித் தப்பித்துக்கொண்டிருக்கிறார். பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட சர்வதேசக் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறோம். அதனால் அவரை சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருக்கிறோம். இனி அவர் தப்பிக்க வாய்ப்பே இல்லை” என்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் பில்ட்-அப் கொடுத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், “என் மீது அரசியல் சதி நடக்கிறது. நான் குற்றமற்றவன் என்பதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்” எனப் பேசி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை சந்துருஜி வெளியிட வழக்கு சூடு பிடித்தது.

கொள்ளை

இதற்கிடையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த இருவரைக் கைது செய்த போலீஸ் இந்த வழக்கில் இவர்கள்தான் முக்கிய குற்றாவாளி என்று தெரிவித்தது. ஆனால், முக்கியக் குற்றவாளியான சந்துருஜி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்ததாலும், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பல அரசியல் பிரமுகர்களுக்கும் இதில் தொடர்பிருப்பதால் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் குரலெழுப்பி வந்தன. இந்நிலையில் தலைமறைவாக இருந்த சந்துருஜியை கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி கைது செய்த போலீஸ், அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போதுவரை பொதுமக்கள் ஏடிஎம் மோசடி தொடர்பாகப் போலீஸில் புகார் அளித்து வருகின்றனர்.

அதையடுத்து முக்கிய குற்றவாளியான சந்துருஜியைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது போலீஸ். அதன்படி ”சந்துருஜியை வெளியே விட்டால், இது போன்ற இன்னும் பல பொருளாதார குற்றங்களைத் தொடர்ந்து செய்வார். சமுதாயத்தில் பொருளாதார சீர்கேடுகளை உண்டு பண்ணுவார். அதனால் இந்திய வங்கி சேவை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். எனவே அவரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சி.பி.சி.ஐ.டி எஸ்.பி செல்வம் கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்று சந்துருஜி மீது குண்டாஸ் பிறப்பித்து, கலெக்டர் அபிஜித் விஜய் சௌத்ரி உத்தரவிட்டிருக்கிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க