`நீங்க எப்படி இத செய்யலாம்' - மலர் அலங்காரத்தால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம்! | clash between stalin and azhagiri supporters in marina

வெளியிடப்பட்ட நேரம்: 22:47 (04/09/2018)

கடைசி தொடர்பு:06:57 (05/09/2018)

`நீங்க எப்படி இத செய்யலாம்' - மலர் அலங்காரத்தால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம்!

மு.க.அழகிரி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ள நிலையில், இதற்காகக் கருணாநிதி நினைவிடத்தில் மலர் அலங்காரம் நடைபெற்று வருகிறது. இந்த மலர் அலங்காரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டாலின் ஆதரவாளரான தி.மு.க எம்.எல்.ஏ சேகர்பாபு மற்றும் அழகிரி ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றது.

மு.க.அழகிரி

தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தன்னை மீண்டும் தி.மு.க-வில் சேர்க்க வலியுறுத்தி கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளார். அதன்படி நாளை சேப்பாக்கத்திலிருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும், இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என மு.க.அழகிரி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். காவல்துறை சார்பில் பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்டதால், திட்டமிட்டபடி நாளை கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதற்காக  அலங்காரத்துக்குத் தேவையான, மல்லிகை உள்ளிட்ட சில வகை பூக்கள் ஒரு டன் அளவுக்கு, மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம்

அதை வைத்து சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி, நினைவிடத்தில் மலர் அலங்காரம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, அங்கு வந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், ஸ்டாலின் ஆதரவாளரான சேகர் பாபு, மலர் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்த அழகிரி ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில், ``நீங்க எப்படி அலங்காரம் செய்யலாம். சமாதியில் மலர் அலங்காரம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அதுவே வழக்கமாகி விடும். சமாதிக்கு வெளியில் அலங்காரம் செய்துகொள்ளுங்கள்" எனக் கூறினார். இதனால் இரு தரப்பினருக்குமிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்து வருவதால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது. இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.